விவசாயிகளின் போராட்டம் குறித்து பாஜக எம்.பி. கங்கனா சர்ச்சை கருத்து: விவசாய சங்கம் கடும் கண்டனம்

மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டம் வங்கதேசத்தில் ஏற்பட்டதைப் போன்ற நிலைமையை நம் நாட்டில் ஏற்படுத்தியிருக்கும் என்று பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரணாவத் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 கங்கனா (கோப்புப் படம்)
கங்கனா (கோப்புப் படம்)ANI
Published on
Updated on
2 min read

தாணே: மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டம் வங்கதேசத்தில் ஏற்பட்டதைப் போன்ற நிலைமையை நம் நாட்டில் ஏற்படுத்தியிருக்கும் என்று பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரணாவத் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது கருத்துக்கு அகில இந்திய கிசான் சபா என்ற விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு தழுவிய அளவில் விவசாயிகள் போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து மூன்று சட்டங்களையும் அமல்படுத்தாமல் கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில், பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரணாவத், எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ பதிவில் "நாட்டில் வலுவான தலைமை இருந்திருக்காவிட்டால், மூன்று வேளாண் சட்டங்களையும் எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டம் வங்கதேசத்தில் ஏற்பட்டதைப் போன்ற நிலைமையை நம் நாட்டில் ஏற்படுத்தியிருக்கும்.

விவசாயிகளின் போராட்டத்தின்போது உடல்கள் தொங்கவிடப்பட்டன. பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்றன' என்று தெரிவித்தார்.

கங்கனா ரணாவத்தின் இந்தக் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து அகில இந்திய கிசான் சபா (ஏஐகேஎஸ்) என்ற விவசாய சங்கத்தின் தலைவர் அசோக் தவாலே திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கங்கனா ரணாவத்தின் கருத்துகள் மிகவும் கண்டிக்கத்தக்கவை. விவசாயத்தை அழிக்க நினைக்கும் தனது "தலைவர்களை' மகிழ்விப்பதற்காக இந்தக் கருத்துகளை கங்கனா தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களும் நாட்டின் இறையாண்மையையும் உணவுப் பாதுகாப்பையும் சமரசம் செய்யும் வகையில் இருந்தன. அவற்றை எதிர்த்து கடுமையான தட்பவெப்ப நிலைமை, கரோனா பெருந்தொற்று பரவல் ஆகியவற்றைத் தாண்டி விவசாயிகளின் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் 736 பேர் உயிர்த் தியாகம் செய்தனர்.

சுதந்திரப் போராட்டத்துக்கு துரோகம் இழைத்து, ஆங்கிலேயரின் கைக்கூலிகளாகச் செயல்பட்ட மதவாத சக்திகளுக்கு விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களின் தேசபக்தி குறித்து கேள்வியெழுப்ப எந்த தார்மீக உரிமையும் இல்லை.

கங்கனா ரணாவத் தெரிவித்துள்ள கருத்துகளுக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். விவசாயிகளிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தும் நோக்கில் கங்கனாவின் கருத்துகள் இருப்பதால் இதை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அசோக் தவாலே தெரிவித்துள்ளார்.

பாஜக மீது ராகுல் விமர்சனம்

"கங்கனாவின் கருத்து, விவசாயிகளுக்கு எதிரான பாஜகவின் மனநிலையை காட்டுகிறது; மேற்கு உத்தர பிரதேசம், ஹரியாணா மற்றும் பஞ்சாப்பை சேர்ந்த விவசாயிகளை அவமதிக்கும் வகையில் உள்ளது' என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,"விவசாய சட்டங்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்த்தியாகம் செய்தவர்களை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் போலவும் வெளிநாட்டினரின் கைகூலிகளாக செயல்பட்டவர்களாகவும் பாஜக எம்.பி. ஒருவர் சித்தரித்துள்ளார்.

இது, விவசாயிகளுக்கு எதிரான பாஜகவின் மனநிலையை வெளிக்காட்டியுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்ட உத்தரவாதம் அளிப்பது குறித்த எந்த முன்னெடுப்பையும் மத்திய அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை. போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கும் நிவாரணத்தொகை வழங்கப்படவில்லை. விவசாயிகளுக்கு தொடர்ந்து மோடி அரசு துரோகம் இழைத்து வருகிறது. எம்எஸ்பிக்கான சட்ட உத்தரவாதத்தை வழங்க இண்டியா கூட்டணி தொடர்ந்து போராடும்' என குறிப்பிட்டார்.

கங்கனா கருத்தில் உடன்பாடில்லை: பாஜக

இதனிடையே, விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக கங்கனா தெரிவித்த கருத்தில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று பாஜக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில், "விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக பாஜக எம்.பி. கங்கனா ரணாவத் தெரிவித்துள்ள கருத்து எங்கள் கட்சியின் கருத்து அல்ல. அவர் தெரிவித்த கருத்து எங்களுக்கு ஏற்புடையது அல்ல.

கட்சியின் கொள்கை விவகாரங்கள் தொடர்பாக அறிக்கை வெளியிடும் அதிகாரம் கங்கனாவுக்கு வழங்கப்படவில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற கருத்துகளைத் தெரிவிக்க வேண்டாம் என்று அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com