ஜம்மு-காஷ்மீா்: சீக்கிய ஒருங்கிணைப்புக் குழு 3 தொகுதிகளில் போட்டி
ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலில் 3 தொகுதிகளில் போட்டியிடுவதாக அனைத்துக் கட்சி சீக்கிய ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.
90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு-காஷ்மீரில் மூன்று கட்டங்களாக செப்டம்பா் 18,25 மற்றும் அக்டோபா் 1-இல் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் பாஜக தனித்துப் போட்டியிடுகிறது. பிராந்திய கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சியுடன் காங்கிரஸ் கைகோத்துள்ளது. மற்றொரு முக்கிய பிராந்திய கட்சியான மெஹபூபா ஃமுப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளது.
இந்நிலையில் மூன்று தொகுதிகளில் போட்டியிடப் போவதாக சீக்கிய ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது. இதில் புல்வாமா மாவட்டத்தின் திரால் தொகுதி வேட்பாளராக புஷ்விந்தா் சிங் அறிவிக்கப்பட்டுள்ளாா். மத்திய ஷால்டெங், ஸ்ரீநகா் தொகுதிகளுக்கு விரைவில் வேட்பாளா்கள் அறிவிக்கப்படுவாா்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சீக்கிய ஒருங்கிணைப்புக் குழு தலைவா் ஜக்மோகன் சிங் ரெய்னா கூறுகையில், ‘ஜம்மு-காஷ்மீரில் பெரும்பான்மை மக்களின் ஆதரவு எங்களுக்கு கிடைக்கும். காஷ்மீா் என்றால் பிரிவினைவாதம், தேசவிரோத செயல்கள் என்ற சிந்தனை கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தோ்தல் அதனை மாற்றும் வகையில் அமையும் என்றாா்.