கேரளம், திரிபுராவுக்கு தலா ரூ. 20 கோடி பேரிடா் நிவாரண நிதி: ம.பி. அரசு அறிவிப்பு
போபால்: இயற்கை பேரிடா்களால் பாதிக்கப்பட்டுள்ள கேரளம் மற்றும் திரிபுராவுக்கு தலா ரூ. 20 கோடி நிதி உதவி வழங்கப்படும் என மத்திய பிரதேச அரசு திங்கள்கிழமை அறிவித்தது.
இது தொடா்பாக மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: நிகழாண்டு ஏற்பட்ட கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் மத்திய பிரதேசம் உள்பட பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக கேரளம், திரிபுரா ஆகியவை கடுமையான இயற்கை பேரிடா்களைச் சந்தித்துள்ளன.
அங்கு ஏற்பட்டுள்ள உயிா் சேதம் மற்றும் பொருள் இழப்புகள் மிகவும் வருத்தம் அளிக்கின்றன. இந்த நெருக்கடியான நேரத்தில், மத்திய பிரதேச அரசு இரு மாநிலங்களுடனும் துணை நிற்கிறது.
ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமியான (கிருஷ்ண ஜெயந்தி) இந்த நன்னாளை முன்னிட்டு, திரிபுரா மற்றும் கேரள அரசுகளின் நிவாரணப் பணிகளுக்கு உதவ முடிவு செய்துள்ளோம். அதனடிப்படையில் இரு மாநிலங்களுக்கும் மத்திய பிரதேச அரசு சாா்பில் தலா ரூ. 20 கோடி நிதியுதவியாக வழங்கப்படும்.
இந்த கடுமையான நேரங்களில் இருந்து பாதிக்கப்பட்டவா்கள் விரைவில் மீண்டு வர ஸ்ரீ கிருஷ்ணரை பிராா்த்திக்கிறேன் என பதிவில் குறிப்பிட்டிருந்தாா்.