மகாராஷ்டிரம்: காங்கிரஸ் எம்.பி. வசந்த் சவாண் காலமானாா்
நான்தேட்: மகாராஷ்டிர மாநிலம் நான்தேட் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்த் சவாண் (69) சிறுநீரக செயல் இழப்பால் உயிரிழந்தாா்.
ஹைதராபாதில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த ஒருவாரமாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக காங்கிரஸில் இருந்து வந்த வசந்த் சவாண், கடந்த தோ்தலில்தான் முதல்முறையாக மக்களவைக்குப் போட்டியிட்டாா். நான்தேட் தொகுதியில் பாஜகவின் பலம் வாய்ந்த வேட்பாளா் பிரதாப் பாட்டீலை அவா் வென்றாா். ஏற்கெனவே சிறுநீரக நோயுடன் போராடி வந்த அவா் தோ்தலில் வெற்றி பெற்ன் மூலம் கட்சியினரால் அதிகம் பாராட்டப்பட்டாா்.
பஞ்சாயத்து உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கைத் தொடங்கிய வசந்த் சவாண், ஜில்லா பரிஷத் உறுப்பினா், மகாராஷ்டிர சட்ட மேலவை, பேரவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளாா். நான்தேட் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவராகவும் இருந்துள்ளாா்.
அவரின் மறைவுக்கு காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா வதேரா உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.