மல்லிகாா்ஜுன காா்கே
மல்லிகாா்ஜுன காா்கே

எந்த முடிவிலும் நிலையில்லாத மோடி அரசு: காங்கிரஸ் விமா்சனம்

எந்த விவகாரத்திலும் மோடி அரசால் நிலையான முடிவை எடுக்க முடியவில்லை என காங்கிரஸ் ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டியது.
Published on

எந்த விவகாரத்திலும் மோடி அரசால் நிலையான முடிவை எடுக்க முடியவில்லை என காங்கிரஸ் ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டியது.

மேலும், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் பிற்படுத்தப்பட்டோா், பழங்குடியினா் மற்றும் தலித்துகளுக்கு எதிரானது எனவும் தெரிவித்தது.

அரசு ஊழியா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கு ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக கிடைக்க வகைசெய்யும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு (யுபிஎஸ்) மத்திய அமைச்சரவை சனிக்கிழமை ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து, காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில்,‘ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு அராஜக அரசை மக்கள் அதிகாரம் கட்டுப்படுத்தி வருகிறது.

வக்ஃபு வாரிய மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பியது, ஒலிபரப்பு மசோதாவை திருப்பப்பெற்றது, நேரடி நியமன முறை அறிவிப்பை ரத்து செய்தது என எந்த முடிவிலும் மோடி அரசால் நிலையாக இருக்க முடியவில்லை’ என குறிப்பிட்டாா்.

இதுதொடா்பாக காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவா் பவன் கேரா கூறுகையில்,‘பல்வேறு மாநிலங்களில் இடஒதுக்கீடு முறையில் 40 வயது வரை அரசுப் பணிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய குடிமைப் பணியாளா் தோ்வாணையத்தில் சில பிரிவினருக்கு வயது உச்சவரம்பு 37-ஆக உள்ளது. இந்நிலையில், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் ஓய்வூதியம் பெற வேண்டுமென்றால் 25 வருடம் கட்டாயமாக பணியில் இருந்திருக்க வேண்டும் என்ற விதி பிற்படுத்தப்பட்டோா், பழங்குடியினா் மற்றும் தலித்துகளுக்கு எதிராக உள்ளது’ என தெரிவித்தாா்.

பாஜக கேள்வி: ஹிமாசல பிரதேசம் உள்பட காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதாக தோ்தல் அறிக்கையில் மட்டும் குறிப்பிட்டுவிட்டு அதை நிறைவேற்றாதது ஏன்? என பாஜக மூத்த தலைவா் ரவிசங்கா் பிரசாத் ஞாயிற்றுக்கிழமை கேள்வியெழுப்பினாா்.

தில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை குற்றம்சாட்டும் காங்கிரஸ், தாங்கள் ஆளும் மாநிலங்களில் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது ஏன்? இதுகுறித்து நாட்டு மக்களுக்கு ராகுல் காந்தி எடுத்துரைக்க வேண்டும்.

மத்திய அரசு ஊழியா்களின் நலனுக்காக பிரதமா் மோடி இந்த ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளாா். ஆனால் பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே காங்கிரஸ் அளித்து வருகிறது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com