அகில இந்திய ஹஜ் கமிட்டி உறுப்பினர் தேர்தல்: வேளச்சேரி எம்எல்ஏ ஹசன் மௌலானா தேர்வு

தென் மாநிலங்களுக்கான அகில இந்திய ஹஜ் கமிட்டி உறுப்பினர் தேர்தலில் சென்னை வேளச்சேரி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ஹசன் மௌலானா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அகில இந்திய ஹஜ் கமிட்டி உறுப்பினர் தேர்தல்: வேளச்சேரி எம்எல்ஏ ஹசன் மௌலானா தேர்வு
Published on
Updated on
1 min read

நமது நிருபர்

தென் மாநிலங்களுக்கான அகில இந்திய ஹஜ் கமிட்டி உறுப்பினர் தேர்தலில் சென்னை வேளச்சேரி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ஹசன் மௌலானா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தேசிய ஹஜ் கமிட்டியின் தென் மாநிலங்களுக்கான உறுப்பினர் தேர்தல் தில்லியில் ஆர்.கே. புரத்தில் உள்ள ஹஜ் கமிட்டி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்தலில் அகில இந்திய கமிட்டி உறுப்பினர் பதவிக்கு போட்டியிட ஹசன் மௌலானா எம்எல்ஏவை தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தது. இந்த நிலையில், இத்தேர்தலில் போட்டியின்றி ஹசன் மௌலானா தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக, இத்தேர்தலில் போட்டியிட்ட கர்நாடக ஹஜ் கமிட்டி உறுப்பினர் ஷாஹித் வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இதையடுத்து, ஹசன் போட்டியின்றித் தேர்வுசெய்யப்பட்டார்.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டித் தலைவர் எம்எல்ஏ அப்துல் சமது, மூத்த உறுப்பினர் குன்னங்குடி ஹனிபா, மாநகராட்சி கவுன்சிலர்கள் பாத்திமா முஸாபர், ஹமீதாதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து வேளச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ ஹசன் மௌலானா கூறியதாவது: தென் மாநிலங்களுக்கான தேசிய ஹஜ் கமிட்டி உறுப்பினர் பதவிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் என்னை பரிந்துரைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோருக்கு நன்றி. இப்பதவிக் காலம் 3 ஆண்டுகள்.

நான் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் நடைபெற்ற கூட்டத்தில், வரும் ஆண்டுகளில் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு மக்கா, மதீனாவுக்கு அருகில் தங்கும் வசதி இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன்.

யாத்திரை மேற்கொள்ளும் ஹாஜிக்கள் தங்குவதற்காக தமிழ்நாடு ஹஜ் கமிட்டிக்கென சென்னையில் பிரத்யேக ஹஜ் ஹவுஸ் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஹாஜிகளுக்கு எவ்வித சிரமம் இல்லாத வகையில் ஹஜ் பயணம் செய்வதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com