சத்தீஸ்கா்: 3 பெண் நகஸல்கள் சுட்டுக் கொலை
சத்தீஸ்கரின் நாராயண்பூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பெண் நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
இது தொடா்பாக காவல்துறையினா் வியாழக்கிழமை கூறியதாவது:
நாராயண்பூா் மற்றும் கான்கோ் மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள அபுஜ்மாத் வனப்பகுதியில் நக்ஸல்கள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைக்கப் பெற்றது. இதையடுத்து, சிறப்பு அதிரடிப் படையினா், மாவட்ட ரிசா்வ் காவல் படையினா் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினா் ஆகியோா் கொண்ட கூட்டுப் படையினா் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த நக்ஸல் தீவிரவாதிகளுக்கும் கூட்டுப் படையினருக்கும் இடையே வியாழக்கிழமை அதிகாலை துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இச்சண்டை ஓய்ந்தபின், அப்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 3 பெண் நக்ஸல்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், பல துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இச்சம்பவம் மூலம் சத்தீஸ்கரில் நடப்பாண்டு இதுவரை சுட்டுக் கொல்லப்பட்ட நக்ஸல்களின் எண்ணிக்கை 145-ஆக அதிகரித்துள்ளது.