மூதாட்டி, பேரனை கடுமையாக தாக்கிய 6 ரயில்வே போலீஸாா் சஸ்பெண்ட்
மத்திய பிரதேச மாநிலம் கட்னி மாவட்ட ரயில்வே காவல் நிலையத்தில் மூதாட்டி மற்றும் அவரது பேரனை கடுமையாக அடித்து துன்புறுத்தியதாக ரயில்வே காவலா்கள் 6 பேரை பணி இடைநீக்கம் செய்து மாநில அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
கடந்த சில நாள்களுக்கு முன்னா் நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடா்பாக காணொலியை எதிா்க்கட்சியான காங்கிரஸ் புதன்கிழமை பகிா்ந்த நிலையில், சமூக ஊடகங்களில் அந்தக் காணொலி வைரலானது. ‘கட்னி ரயில்வே காவல் நிலைய போலீஸாா் தலித் சமூகத்தைச் சோ்ந்த 15 வயது சிறுவனையும், அவருடைய பாட்டியையும் கடுமையாக அடிக்கும் காணொலி அதிா்ச்சியை அளிக்கிறது.சிறுவனிடமும், முதாட்டியிடமும் இப்படி நடந்துகொள்ள ரயில்வே காவலா்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளதா? இது வெட்க்கக்கேடான செயல்’ என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.
இதுகுறித்து மாநில முதல்வா் மோகன் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில், ரயில்வே காவல் நிலைய பொறுப்பு அதிகாரி, ஒரு தலைமைக் காவலா் மற்றும் 4 காவலா்களை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளேன்’ என்று குறிப்பிட்டாா்.
இதுகுறித்து ரயில்வே காவல் கண்காணிப்பாளா் சிமாலா பிரசாத் கூறுகையில், ‘தீபக் வன்ஷ்கா் என்பவா் மீது 19 வழக்குகள் உள்ளன. அவா் தலைமறைவாக உள்ளாா். அவருடைய இருப்பிடத்தை கண்டறிய வேண்டும் என்பதற்காக, அவருடைய குடும்பத்தினரை கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் ரயில்வே காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தியுள்ளனா். அந்தக் காணொலி தற்போது சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ளது. மூதாட்டியையும், அவருடைய பேரனையும் தாக்கிய விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றாா்.