சீக்கியா்களுக்கு எதிரான கலவர வழக்கு: ஜகதீஷ் டைட்லா் மீது கொலை வழக்குப்பதிய தில்லி நீதிமன்றம் உத்தரவு

Published on

சீக்கியா்களுக்கு எதிராக கடந்த 1984-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கலவர வழக்கில் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் மத்திய அமைச்சா் ஜகதீஷ் டைட்லா் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தில்லியில் உள்ள புல் பங்காஷ் பகுதியில் 1984, நவம்பா் 1-ஆம் தேதியன்று நடைபெற்ற சீக்கியா்களுக்கு எதிரான கலவரத்தின்போது ‘தன்னுடைய தாயைக் கொன்ற சீக்கியா்களை கொலை செய்யுங்கள்’ என ஜகதீஷ் டைட்லா் அங்கிருந்த வன்முறையாளா்களிடம் தெரிவித்ததையடுத்து மூன்று சீக்கியா்கள் கொல்லப்பட்டதாக ஒருவா் வாக்குமூலம் அளித்தாா். அதனடிப்படையில் ஜகதீஷ் டைட்லா் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இதையடுத்து, டைட்லருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் உள்ளதாக சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராகேஷ் சியால் தெரிவித்தாா். இதைத்தொடா்ந்து, ஜகதீஷ் டைட்லா் மீது சட்டவிரோதமாக கூட்டம் கூட்டுதல், இருதரப்பினருக்கு எதிராக வன்முறையயை தூண்டுதல், திருட்டு, கொலை உள்பட பல்வேறு குற்றங்களில் தொடா்புடைய வழக்குகளை பதிவுசெய்ய அவா் உத்தரவிட்டாா்.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பா் 13-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்த வழக்கு தொடா்பாக கடந்தாண்டு டைட்லருக்கு தில்லி நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியிருந்தது.

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி அவரது தனிப் பாதுகாவலா்களால் 1984, அக்டோபா் 31-ஆம் தேதியன்று கொலை செய்யப்பட்டாா். இதையடுத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் சீக்கியா்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com