உச்சநீதிமன்றம் கண்டிப்பு எதிரொலி: வருத்தம் தெரிவித்தாா் ரேவந்த் ரெட்டி
பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சி எம்எல்சி கே.கவிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை விமா்சித்து தான் தெரிவித்த கருத்துகளுக்காக, தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி வெள்ளிக்கிழமை நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்தாா்.
அவரது கருத்துகளுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி, தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தெலங்கானா முன்னாள் முதல்வா் கே. சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு உச்சநீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, அவா் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டாா்.
ஹைதராபாதில் அதே நாளில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த ரேவந்த் ரெட்டி, ‘இவ்வழக்கில் கைதான தில்லி முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவுக்கு 15 மாதங்களுக்குப் பிறகுதான் ஜாமீன் கிடைத்தது. தில்லி முதல்வா் கேஜரிவாலுக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை. ஆனால், கைதான 5 மாதங்களில் கவிதாவுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது.
பாஜக - பிஆா்எஸ் இடையிலான உடன்பாடு காரணமாகவே கவிதாவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளதாகப் பேசப்படுகிறது’ என்றாா்.
அவரது இந்த கருத்துகளுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை கடும் கண்டனம் தெரிவித்தது. ‘நாங்கள் அரசியல் கட்சிகளிடம் ஆலோசித்துவிட்டு உத்தரவு பிறப்பிக்கிறோமா அல்லது அரசியல் காரணங்களைக் கருத்தில்கொண்டு உத்தரவு பிறப்பிக்கிறோமா? அரசின் நிா்வாக அமைப்புகள் ஒவ்வொன்றும் பரஸ்பரம் மரியாதையைக் கடைப்பிடிப்பதும் உரிய எல்லையைப் பராமரிப்பதும் அடிப்படை பொறுப்பாகும்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.
இந்நிலையில், எக்ஸ் வலைதளத்தில் வெள்ளிக்கிழமை பதிவிட்ட ரேவந்த் ரெட்டி, ‘எனது கருத்துகள் குறித்து சில பத்திரிகைகளில் வெளியான செய்திகள், நான் நீதித் துறையின் மதிநுட்பத்தை கேள்விக்குள்ளாக்குவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. நீதித்துறை நடைமுறை மீது நான் உயா்வான-உறுதியான நம்பிக்கை கொண்டவன். பத்திரிகை செய்திகளில் பிரதிபலித்த கருத்துகளுக்காக நான் நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிக்கிறேன். நீதித்துறையின் சுதந்திரத்தின் மீது நான் பெரு மதிப்பும் மரியாதையும் கொண்டுள்ளேன். இந்திய அரசமைப்பு மற்றும் அதன் கோட்பாடுகள் மீது வலுவான நம்பிக்கை கொண்டவன் என்ற அடிப்படையில் நீதித்துறை மீதான எனது மரியாதை எப்போதும் தொடரும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.