கடன் வரம்புக்கு எதிராக கேரள அரசு மனு: ‘விரைவில் அரசியல் சாசன அமா்வு விசாரணை’
நிகர கடன் திரட்ட மத்திய அரசு வரம்பு விதித்ததற்கு எதிராக கேரள அரசு தொடுத்த வழக்கை, விரைவில் அரசியல் சாசன அமா்வின் விசாரணைக்குப் பட்டியலிட உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டது.
இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்த மனுவில், ‘கேரளத்தின் நிதித் தேவைகளைப் பூா்த்தி செய்ய மாநில அரசுக்கு சுமாா் ரூ.26,000 கோடி தேவைப்படுகிறது. இந்நிலையில், கேரள அரசு நிகர கடன் திரட்ட மத்திய அரசு வரம்பு விதித்துள்ளது. இது பொதுச் சந்தையில் கடன் திரட்டுவது உள்பட அனைத்து வழிகளிலும் கடன் திரட்டுவதைக் கட்டுப்படுத்துகிறது.
அத்துடன் இது அரசமைப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ், தனது நிதி விவகாரங்களை ஒழுங்குபடுத்த மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடும் வகையில் உள்ளது. இது அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சி அமைப்புக்கு எதிரானது’ என்று தெரிவிக்கப்பட்டது.
5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு: இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு கூறியதாவது:
அரசமைப்புச் சட்டத்தின் 293-ஆவது பிரிவு மாநிலங்கள் கடன் வாங்கும் விவகாரத்தை கையாள்கிறது. இந்தப் பிரிவு உச்சநீதிமன்றத்தின் அதிகாரபூா்வ விளக்கத்துக்கு இதுவரை உள்படுத்தப்படவில்லை. மத்திய அரசிடம் இருந்தோ அல்லது பிற வழிகளில் இருந்தோ கடன் திரட்ட மாநிலங்களுக்கு அரசமைப்புச் சட்டத்தின் 293-ஆவது பிரிவு உரிமை அளித்துள்ளதா என்பன உள்ளிட்ட விவகாரங்களை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமா்வு விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே இந்த வழக்கு விசாரணையை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வுக்குப் பரிந்துரைப்பது பொருத்தமாக இருக்கும் என்று தெரிவித்தது.
இந்நிலையில், இந்த மனு தொடா்பாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக கேரள அரசு தரப்பில் மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் முறையிட்டாா். அப்போது கடந்த ஏப்.1-இல் அரசியல் சாசன அமா்வின் விசாரணைக்கு கேரள அரசின் மனு பரிந்துரைக்கப்பட்டதாகவும், அந்த அமா்வை அமைப்பதற்கான அலுவல் நடவடிக்கையை உச்சநீதிமன்றப் பதிவாளா் மேற்கொள்ளவில்லை என்றும் கபில் சிபல் தெரிவித்தாா்.
இதை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதிபதிகள் அமா்வு, அந்த மனுவை விரைந்து அரசியல் சாசன அமா்வின் விசாரணைக்குப் பட்டியலிட ஒப்புக்கொண்டது.