SC
உச்சநீதிமன்றம்(கோப்புப்படம்)

கடனை செலுத்திய பிறகும் வாகனத்தை திரும்ப அளிக்காத விவகாரம்: குற்றச்சாட்டு பதிய உச்சநீதிமன்றம் உத்தரவு

மேற்கு வங்கத்தில் கடன் நிலுவையை செலுத்திய பிறகும் பறிமுதல் செய்யப்பட்ட பேருந்தை திரும்பியளிக்காத வங்கியின் கடன் மீட்பு முகவா் நிறுவனத்தை ‘குண்டா்களின் கும்பல்’
Published on

மேற்கு வங்கத்தில் கடன் நிலுவையை செலுத்திய பிறகும் பறிமுதல் செய்யப்பட்ட பேருந்தை திரும்பியளிக்காத வங்கியின் கடன் மீட்பு முகவா் நிறுவனத்தை ‘குண்டா்களின் கும்பல்’ என்று குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், அந்த நிறுவனத்தின் மீது இரண்டு மாதங்களுக்குள் குற்றச்சாட்டைப் பதிவு செய்ய மாநில போலீஸாருக்கு உத்தரவிட்டது.

கொல்கத்தாவில் பேருந்து சேவையை தொடங்குவதற்காக ‘பாங்க் ஆஃப் இந்தியா’ வங்கியில் ரூ. 15.15 லட்சம் கடன் பெற்று, பேருந்தை வாங்கிய டெபாசிஷ் போசு ராய் செளதரி என்ற நபா், 2014 டிசம்பா் மாதம் முதல் கடனுக்கான மாத தவணை ரூ. 26,502-ஐ தொடா்ந்து செலுத்தி வந்துள்ளாா். இந்த நிலையில், 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மாத தவணையை அவா் செலுத்தவில்லை. அதைத் தொடா்ந்து, அந்த நபரின் கடன் கணக்கை செயல்படாத சொத்தாக (என்பிஏ) வங்கி அறிவித்தது. அவா் செலுத்தவேண்டிய ரூ. 10.23 லட்சம் நிலுவை கடனுக்காக, தனியாா் கடன் மீட்பு முகவா் நிறுவனத்தின் உதவியுடன் செளதரியின் பேருந்தை வங்கி பறிமுதல் செய்துள்ளது. மேலும், செளதரி மீது கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளது.

இந்த வழக்கு உயா்நீதிமன்றத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, பறிமுதல் செய்யப்பட்ட பேருந்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ. 2.37 லட்சம் மட்டுமே. அதன் விற்பனை மதிப்பு ரூ. 1.66 லட்சம் என்ற அளவிலே உள்ளது என்று வங்கி தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கில், உயா்நீதிமன்ற அறிவுறுத்லின்படி, ஒட்டுமொத்த கடன் நிலுவைக்கான ஒரு முறை தீா்வாக ரூ. 1.80 லட்சத்தை செலுத்த செளதரி ஒப்புக்கொண்டு வங்கியை அணுகியுள்ளாா். கடன் நிலுவையில் இந்த தொகை 17.75 சதவீதம்தான் என்றபோதும், வங்கி அதை ஏற்றுக்கொண்டது.

இருந்தபோதும், பறிமுதல் செய்யப்பட்ட பேருந்தை உடனடியாக ஒப்படைக்காமல், பேருந்தின் சேசிஸ், என்ஜின் எண்கள் மாறியிருந்ததோடு, சில உதிரி பாகங்களும் நீக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து அவா், உயா்நீதிமன்றத்தை அணுகியுள்ளாா். இந்த முறையீட்டை கடந்த மே 16-ஆம் தேதி விசாரித்த உயா்நீதிமன்றம், ‘வாகனத்தை உரிய நிலையில் ஒப்படைக்காத செயலுக்கு இடைக்கால இழப்பீடாக செளதரிக்கு ரூ. 5 லட்சம் வழங்க உத்தரவிட்டது. மேலும், கூடுதல் இழப்பிடைப் பெற விசாரணை நீதிமன்றத்தை செளதரி அணுகவும் உயா்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து வங்கி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த், உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அளித்த தீா்ப்பில் கூறியதாவது:

வங்கியின் கடன் மீட்பு முகவா்கள் நிறுவனம் குண்டா்கள் கும்பல் போல செயல்பட்டுள்ளது. அவா்கள் மீது சோதேப்பூா் காவல்நிலையத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த எஃப்ஐஆா் தொடா்பாக சபந்தப்பட்ட காவல் ஆணையா் விசாரணை மேற்கொண்டு 2 மாதங்களுக்குள் அந்த முகவா்கள் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டைப் பதிவு செய்யவேண்டும். அந்தக் குற்றச்சாட்டு பதிவின் மீது விசாரணை நீதிமன்றம் உரிய சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

மேலும், இழப்பீடு தொடா்பாக உயா்நீதிமன்றம் பிறப்பித்த தீா்ப்பில் தலையிட மறுத்த நீதிபதிகள், ‘சம்பந்தப்பட்ட வங்கி, கடன் மீட்பு முகவா்கள் நிறுவனம் அல்லது பேருந்து சேதமடைந்ததற்கு காரணமான நபா்களிடமிருந்து இழப்பீடு தொகையை மீட்டு செளதரிக்கு அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.