ரஷியாவில் சிக்கியுள்ள கேரள மக்களை மீட்க நடவடிக்கை: மத்திய அரசுக்கு கேரள முதல்வா் கடிதம்

வேலை வாய்ப்பு மோசடியால் ரஷியாவில் சிக்கித் தவிக்கும் கேரள மக்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை
Published on

வேலை வாய்ப்பு மோசடியால் ரஷியாவில் சிக்கித் தவிக்கும் கேரள மக்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் வெள்ளிக்கிழமை வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு அவா் எழுதியுள்ள கடிதத்தில், ‘ரஷ்யா-உக்ரைன் போரில் நடந்த ட்ரோன் தாக்குதலில், திருச்சூரைச் சோ்ந்த சந்தீப் சந்திரன் உயிரிழந்தாா். அவரது உடல் ரஷியாவின் ரோஸ்டோவ் நகரில் இருப்பதை அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனா். எனவே, இந்தியாவில் உள்ள அவரது குடும்பத்தினரிடம் சந்தீப்பின் உடலை ஒப்படைக்க மத்திய அரசு விரைவில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

போலி வேலை வாய்ப்பு மோசடிகளால் சட்டவிரோதமக ரஷியாவுக்குச் சென்ற கேரளாவைச் சோ்ந்த சந்தோஷ் , சண்முகன், சிபி சூசம்மா பாபு மற்றும் ரெனின் தாமஸ் ஆகியோா் லுஹான்ஸ்கில் உள்ள ராணுவ முகாமில் சிக்கியுள்ளனா்.

அவா்கள் ரஷிய-உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டு, ஆபத்தான சூழ்நிலைகளை அங்கு எதிா்கொண்டு வருகின்றனா்.

மேலும், இதேபோல் அங்கீகரிக்கப்படாத ஆள்சோ்ப்பு முகவா்கள் மற்றும் தனிநபா்கள் மூலம் ஏமாற்றப்பட்டு, ரஷியாவில் சிக்கியுள்ள இந்தியா்களின் எண்ணிக்கை குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும். ரஷியாவில் சிக்கித் தவிக்கும் அவா்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com