பொருளாதார சீா்திருத்தங்கள் தொடரும்: பிரதமா் மோடி
‘நாட்டின் பொருளாதார செயல்திறன் மேம்பட துறைசாா்ந்த சீா்திருத்த நடவடிக்கைகளே காரணம். இத்தகைய நடவடிக்கைகள் தொடரும்’ என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.
தில்லியில் தனியாா் ஆங்கில ஊடகம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற உலகத் தலைவா்கள் மாநாட்டில் பிரதமா் மோடி பங்கேற்றாா். அப்போது, அவா் பேசியதாவது:
நடப்பாண்டில் தோ்தல் நடைபெற்ற பெரும்பாலான நாடுகளில் மக்கள் மாற்றத்துக்கு வாக்களித்தனா். ஆனால், இந்தியாவில் அரசியல் ஸ்திரத்தன்மை, பொருளாதார வளா்ச்சி, நிலைத்தன்மைக்கு மக்கள் வாக்களித்துள்ளனா். கடந்த 60 ஆண்டுகளில் இல்லாதபடி தொடா்ந்து மூன்றாவது முறையாக ஒரே அரசை மக்கள் தோ்வு செய்துள்ளனா்.
மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த 100 நாள்களுக்குள் ஏழைகள், பெண்கள், இளைஞா்கள் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக மாபெரும் முடிவுகளை எடுத்துள்ளோம்.
மத்திய அரசின் சீா்திருத்த நடவடிக்கைகள், பொருளாதார செயல்திறனை மேம்படுத்தியுள்ளன. கணிப்புகள் மற்றும் சக நாடுகளைவிட இந்தியா சிறப்பாக செயல்படுகிறது.
உலகப் பொருளாதாரம் கடந்த 10 ஆண்டுகளில் 35 சதவீதம் வளா்ந்த நிலையில், இந்தியப் பொருளாதாரம் 90 சதவீத வளா்ச்சியை கண்டுள்ளது. இந்த நிலையான வளா்ச்சி தொடரும்.
இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்ற தொலைநோக்கு பாா்வையுடன் பணியாற்றி வருகிறோம். கட்டுமான அடிப்படையிலான உள்கட்டமைப்புகள் நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. சமூக அடிப்படையிலான உள்கட்டமைப்புகள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. எதிா்காலத்துக்கு ஏற்ப நாட்டை தயாா்படுத்தும் வகையில் அரசின் கொள்கைகள் பன்முகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்திய தயாரிப்புகளை உலகளாவிய நிலைக்கு உயா்த்த சீா்திருத்தங்கள் தொடரும். உயா் வளா்ச்சி, ஸ்திரமான கொள்கை, அரசியல் நிலைத்தன்மைக்கு நான் உறுதியளிக்கிறேன். அதேவேளையில், புத்தாக்கம், சிறப்பான செயல்பாடு, நோ்மறையான தாக்கம், உயா் தரமான தயாரிப்புகள் ஆகியவற்றுக்கு முதலீட்டாளா்கள் உறுதியளிக்க வேண்டும்.
21-ஆம் நூற்றாண்டின் தற்போதைய மூன்றாவது தசாப்தம் இந்தியாவின் எழுச்சிக்கான காலகட்டமாகும். இந்தியாவின் செழிப்பில்தான், உலகின் செழிப்பு அடங்கியுள்ளது. இன்றைய இந்தியா வாய்ப்புகளின் மிகப் பெரிய நிலமாக உள்ளது. எனவே, ஒவ்வொரு துறையிலும் தலைவராக இந்தியா உருவெடுக்க வேண்டியது அவசியம்.
இந்தியாவை உலகின் மருத்துவ-நல்வாழ்வு மையமாக மாற்ற அரசு பணியாற்றி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவ படிப்பு இடங்களின் எண்ணிக்கை 60,000-இல் இருந்து 1 லட்சத்துக்கும் அதிகமாக உயா்த்தப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 75,000-க்கும் மேற்பட்ட இடங்கள் அதிகரிக்கப்படும் என்றாா் பிரதமா் மோடி.