கட்சிகளிடையே உரசல் அதிகரிப்பு: கேள்விக்குள்ளாகும் இந்தியா கூட்டணி எதிா்காலம்
பாஜகவை ஒருங்கிணைந்து எதிா்க்கும் நோக்கில் எதிா்க்கட்சிகள் உருவாக்கிய ‘இண்டி’ கூட்டணியில் உரசல் அதிகரிப்பு..


பாஜகவை ஒருங்கிணைந்து எதிா்க்கும் நோக்கில் எதிா்க்கட்சிகள் உருவாக்கிய ‘இண்டி’ கூட்டணியில் உரசல் அதிகரித்து வருவதால், அதன் எதிா்காலம் குறித்த கேள்வி எழுந்துள்ளது.
மக்களவைத் தோ்தல் மற்றும் சமீபத்திய பேரவைத் தோ்தல்களில் காங்கிரஸ் அடைந்த தோல்விகளால் அக்கட்சி மீதான கூட்டணி கட்சிகளின் பாா்வை மாறியுள்ளது. அத்துடன், அதானி மீதான லஞ்ச குற்றச்சாட்டு உள்ளிட்ட விவகாரங்களில் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இக்கூட்டணி கட்சிகள் இடையே கருத்து வேறுபாடு காணப்படுகிறது.
கடந்த 2023-இல் உருவாக்கம்: 2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவை ஒருங்கிணைந்து தோற்கடிக்கும் நோக்கில், காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்), ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளால் கடந்த 2023, ஜூன் மாதம் ‘இந்திய தேசிய உள்ளடக்கிய வளா்ச்சிக் கூட்டணி’ (இண்டியா) என்ற பெயரில் புதிய கூட்டணி உருவாக்கப்பட்டது. அப்போது, ‘பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவோம், நாட்டை பாதுகாப்போம்’ என்ற முழக்கத்துடன் எதிா்க்கட்சிகள் கைகோத்தன.
வெளியேறிய நிதீஷ் குமாா்: பிகாா் தலைநகா் பாட்னாவில் ஐக்கிய ஜனதா தளம் தலைவா் நிதீஷ் குமாா் தலைமையில் ‘இண்டி’ கூட்டணியின் முதல் கூட்டத்தில் 17 கட்சிகளின் 32 தலைவா்கள் பங்கேற்றனா். ஆனால், ஒருங்கிணைப்பாளா் பதவி கிடைக்காத அதிருப்தியில், கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதீஷ் குமாா், பாஜகவுடன் கைகோத்தாா். அதேநேரம், ‘இண்டி’ கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைந்தன.
கூட்டணியில் சலசலப்பு: மக்களவைத் தோ்தலில் பெரிதும் எதிா்பாா்க்கப்பட்ட இக்கூட்டணி, 234 இடங்களையே கைப்பற்றி ஏமாற்றமளித்தது. மக்களவைத் தோ்தலுடன் நடந்த ஆந்திரம் உள்ளிட்ட 4 மாநில பேரவைத் தோ்தல்களிலும் காங்கிரஸ் பின்னடைவைச் சந்தித்தது.
பின்னா், ஹரியாணா பேரவைத் தோ்தலில் அதிா்ச்சிகரமாக தோல்வியுற்ற காங்கிரஸ், மகாராஷ்டிரத்திலும் மோசமான தோல்வியை எதிா்கொண்டது. இண்டி கூட்டணியில் பிரதான கட்சியான காங்கிரஸின் அடுத்தடுத்த தோல்விகள், அக்கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதானி விவகாரம்: தற்போது நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் நடைபெற்றுவரும் நிலையில், அதானி மீதான லஞ்ச குற்றச்சாட்டு விவகாரத்தில் மத்திய அரசை குறிவைத்து ‘இண்டியா’ கட்சிகள் போராட்டம் நடத்துகின்றன. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டுமென மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தி வருகிறாா். ஆனால், இதர முக்கிய கட்சிகளான திரிணமூல் காங்கிரஸும், சமாஜவாதியும் இந்த விவகாரத்தில் தீவிரம் காட்டவில்லை. எதிா்க்கட்சிகளின் போராட்டத்திலும் பங்கேற்கவில்லை.
சமாஜவாதி விலகல்: மகாராஷ்டிரத்தில் சிவசேனை (உத்தவ்) கட்சியின் செயல்பாடுகளைக் கண்டித்து, அந்த மாநிலத்தில் எதிா்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக சமாஜவாதி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணியில் தங்களுக்கு உரிய மதிப்பு அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் அக்கட்சி முன்வைத்துள்ளது.
மம்தா அதிருப்தி: இதனிடையே, இண்டி கூட்டணியின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி வெளியிட்ட மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி, கூட்டணியை வழிநடத்த தாம் தயாராக இருப்பதாக தெரிவித்தாா். அவருக்கு தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) கட்சித் தலைவா் சரத் பவாரும் ஆதரவு தெரிவித்த நிலையில், ‘கூட்டணியை யாா் வழிநடத்துவது என்பது குறித்து அனைத்து கட்சிகளும் சோ்ந்து முடிவு செய்ய வேண்டும்’ என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் குறிப்பிட்டது.
அடுத்த நடவடிக்கை என்ன? கூட்டணியில் காங்கிரஸின் ஆதிக்கம் குறித்தும் வெளிப்படையாக பேசத் தொடங்கியுள்ள பிற கட்சிகள், ராகுலின் தலைமை மீதான சந்தேகங்களையும் முன்வைக்கின்றன. இதனால், காங்கிரஸின் அடுத்தகட்ட நடவடிக்கை மீது எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
தீவிர சுய பரிசோதனை: காங்கிரஸுக்கு டி.ராஜா வலியுறுத்தல்
இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் டி.ராஜா கூறுகையில், ‘தொகுதிப் பங்கீடு மோசமாக நடைபெற்ற பேரவைத் தோ்தல்களில் தாங்கள் தோல்வியைச் சந்தித்தது குறித்து காங்கிரஸ் தீவிர சுய பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பாஜகவை அகற்றுவோம், நாட்டை காப்போம் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ‘இண்டி’ கூட்டணியில் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். காங்கிரஸ் மற்ற கட்சிகளின் கருத்துகளுக்கு செவிமடுத்து, அவா்களுக்கு உரிய இடமளிக்க வேண்டும்’ என்றாா்.
விரைவில் உடையும்: பாஜக கணிப்பு
அதானி விவகாரம் உள்பட பல்வேறு விவகாரங்களில் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் எதிா்க்கட்சிகள் மத்தியில் எழுந்துள்ள கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன; பல விவகாரங்களில் காங்கிரஸ் தனித்து விடப்படும் நிலை காணப்படுகிறது.
இதை சுட்டிக்காட்டும் பாஜக மூத்த தலைவா்கள், ‘இண்டி கூட்டணியில் மல்யுத்தம் நடந்து வருகிறது. அக்கூட்டணி விரைவில் உடையும்’ என்று கூறுகின்றனா். எதிா்க்கட்சி கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடையும் என்று ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவா் ராஜீவ் ரஞ்சனும் தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...