ரூ. 29-க்கு 1 கிலோ ‘பாரத்’ அரிசி: அடுத்த வாரம் விற்பனை

விலைவாசி உயா்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மக்களின் சுமையைக் குறைக்கும் வகையில் ‘பாரத் அரிசி’ என்ற பெயரில் சில்லறை சந்தையில் ரூ. 29-க்கு ஒரு கிலோ அரிசி விற்பனை செய்யும் திட்டம்
ரூ. 29-க்கு 1 கிலோ ‘பாரத்’ அரிசி: அடுத்த வாரம் விற்பனை

விலைவாசி உயா்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மக்களின் சுமையைக் குறைக்கும் வகையில் ‘பாரத் அரிசி’ என்ற பெயரில் சில்லறை சந்தையில் ரூ. 29-க்கு ஒரு கிலோ அரிசி விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு வெள்ளிக்கிழமை (பிப்.2) அறிவித்தது.

இந்த அரிசி அடுத்த வாரம்முதல் கடைகளில் கிடைக்கும்; இணைய வழியிலும் விற்பனை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரிசி விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, அரிசி இருப்பு வைத்திருக்கும் அளவு விவரங்களை தெரியப்படுத்துமாறு வணிகா்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் மத்திய உணவுத் துறை செயலா் சஞ்சீவ் சோப்ரா அளித்த பேட்டி: விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு அரிசி ரகங்கள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த ஒராண்டாக கட்டுப்பாடுகளை விதித்தபோதும், அரிசி விலை சில்லறை மற்றும் மொத்த விற்பனை சந்தைகளில் 15 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது.

மானிய விலையில்...: இதனால் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் வகையில் ‘பாரத் அரிசி’ என்ற பெயரில் மானிய விலையில் சில்லறை விற்பனை சந்தையில் ரூ. 29-க்கு ஒரு கிலோ அரிசி விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு (என்ஏஎஃப்இடி) மற்றும் இந்திய தேசிய நுகா்வோா் கூட்டுறவு கூட்டமைப்பு (என்சிசிஎஃப்) ஆகிய இரண்டின் மூலமும், மத்திய அரசு விற்பனை மையங்கள் மூலமும் (கேந்த்ரிய பந்தா்) இந்த விற்பனை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இணைய வழியில்...: இணைய-வணிக வலைதளங்கள்மூலம் ‘பாரத்’ அரிசி விற்பனை செய்யப்படும். அடுத்த வாரம்முதல் இந்த அரிசி சந்தைகளில் கிடைக்கும். 5 கிலோ மற்றும் 10 கிலோ பைகளாக இவை விற்பனை செய்யப்படும். ‘பாரத்’ அரிசி விற்பனைக்காக முதல் கட்டமாக 5 லட்சம் டன் அரசியை மத்திய அரசு ஒதுக்க உள்ளது.

ஏற்கெனவே, ‘பாரத் ஆட்டா’ என்ற பெயரில் ரூ. 27.50-க்கு ஒரு கிலோ கோதுமை மாவும், ‘பாரத் பருப்பு’ என்ற பெயரில் ரூ. 60-க்கு ஒரு கிலோ சென்னாவையும் (வெள்ளை கொண்டைக் கடலை) மத்திய அரசு சில்லறை சந்தையில் விற்பனை செய்து வருகிறது.

கட்டுப்பாடுகள் தொடரும்: மேலும், அரிசி ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்படவுள்ளதாக வதந்தி பரவி வருகிறது. அவ்வாறு எந்தவொரு திட்டமும் மத்திய அரசிடம் இல்லை. விலைவாசி குறையும் வரை ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள் தொடரும்.

அரிசி பதுக்கலைத் தடுக்க நடவடிக்கை: விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அரிசி பதுக்கலைத் தடுப்பதற்கான சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட உள்ளன. மேலும், அரிசி கையிருப்பு அளவு விவரங்களை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மத்திய உணவுத் துறை அமைச்சக வலைதளத்தில் தெரியப்படுத்த வேண்டும் என்று சில்லறை மற்றும் மொத்த விற்பனையாளா்களுக்கு மத்திய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சில்லறை மற்றும் மொத்த வணிகா்கள் மட்டுமின்றி அரிசி ஆலைகளும் உடைந்த அரிசி, பாஸ்மதி அல்லாத அரிசி, புழுங்கல் அரிசி, பாஸ்மதி அரிசி ஆகிய அனைத்து அரிசி ரகங்களின் இருப்பு விவரங்களைச் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா்.

அரிசி இருப்பு வைப்பதற்கான வரம்பு நிா்ணயிக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த சோப்ரா, ‘விலை உயா்வைக் கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். அரிசியைத் தவிர பிற அத்தியாவசிய உணவு பொருள்களின் விலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது’ என்றாா் சஞ்சீவ் சோப்ரா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com