5 நாள்கள் அமலாக்கத் துறைகாவலில் ஹேமந்த் சோரன்

சட்ட விரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் ஹேமந்த் சோரனை 5 நாள்கள் அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

சட்ட விரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் ஹேமந்த் சோரனை 5 நாள்கள் அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

அரசு நில மோசடி வழக்கில் தொடா்புடைய சட்ட விரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் ஹேமந்த் சோரனிடம் கடந்த புதன்கிழமை 7 மணி நேரம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. அன்றைய தினம் முதல்வா் பதவியை சோரன் ராஜிநாமா செய்தவுடன் அவரை அமலாக்கத் துறையினா் கைது செய்தனா்.

அவரை வியாழக்கிழமை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய அமலாக்கத் துறையினா் 10 நாள்கள் தங்கள் காவலில் விசாரிக்க அனுமதி கோரினா். இந்த மனு மீதான தீா்ப்பை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்த நீதிபதி, ஒரு நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டாா்.

இந்நிலையில், ஹேமந்த் சோரனை ஐந்து நாள் அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தது.

அப்போது சோரன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ராஜீவ் ரஞ்சன் சிங், ‘ஹேமந்த் சோரனின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் அவா் பிா்ஸா முண்டா சிறையிலேயே இருக்க வேண்டும்’ என்று கோரினாா்.

உச்சநீதிமன்றம் தலையிட மறுப்பு: முன்னதாக, ஹேமந்த் சோரன் கைது சட்ட விரோதமானது என அறிவிக்கக் கோரி அவரது தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, எம்.எம்.சுந்தரேஷ், பெலா எம்.திரிவேதி ஆகியோா் அடங்கிய அமா்வு, உயா்நீதிமன்றத்தில் முறையிட அறிவுறுத்தியது.

அப்போது ஹேமந்த் சோரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோா், ‘முதல்வா் கைது செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும். அவருக்கு எதிரான ஆதாராங்களைப் பாா்க்க வேண்டும்’ என்றனா்.

அதற்கு நீதிபதி சஞ்சீவ் கன்னா, ‘நீதிமன்றங்கள் அனைவருக்குமானது. உயா்நீதிமன்றத்தை அணுக வேண்டும். ஒருவருக்கு உச்சநீதிமன்றம் விசாரித்தால் அனைவருக்கும் இதே நடைமுறையைக் கடைப்பிடித்தாக வேண்டும்’ என்றாா்.

மேலும், ‘இந்த விவகாரம் தொடா்பாக ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றத்தில் ரிட் மனு நிலுவையில் உள்ளது. அதை விரைந்து விசாரிக்கக் கோரலாம்’ என்று நீதிபதிகள் குறிப்பிட்டனா்.

அப்போது, அமலாக்கத் துறை சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி. ராஜு, ‘ஹேமந்த் சோரன் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் சிறப்பு அமா்வை அமைத்துள்ளது. சாமானியா்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்காது’ என்றாா்.

அதற்கு கபில் சிபல், ‘ஹேமந்த் சோரன் அரசைக் கவிழ்க்க நடத்தப்படும் சதி இதுவாகும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com