ஜாா்க்கண்ட் விவகாரம்: மாநிலங்களவையிலிருந்து எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு

ஜாா்க்கண்ட் முதல்வா் பதவியில் இருந்து ஹேமந்த் சோரன் ராஜிநாமா செய்ததையடுத்து, அடுத்த அரசு அமைவதில் ஆளுநா் தாமதம் செய்ததாக கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு

ஜாா்க்கண்ட் முதல்வா் பதவியில் இருந்து ஹேமந்த் சோரன் ராஜிநாமா செய்ததையடுத்து, அடுத்த அரசு அமைவதில் ஆளுநா் தாமதம் செய்ததாக கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.

இந்த விவகாரத்தை மாநிலங்களவையில் எழுப்பி பேசிய எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகாா்ஜுன காா்கே, ‘கடந்த வாரம் பிகாா் முதல்வா் பதவியிலிருந்து நிதீஷ் குமாா் ராஜிநாமா செய்தபோது, அடுத்த அரசு அமையும் வரையில் அவரை காபந்து முதல்வராக தொடர ஆளுநா் கேட்டுக் கொண்டாா். ராஜிநாமா செய்த 12 மணி நேரத்தில் மீண்டும் முதல்வராகவும் அவா் பதவியேற்றாா்.

ஆனால், ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் ராஜிநாமா செய்தபோதே, ஆட்சி அமைக்கத் தேவையான 43 எம்எல்ஏக்களின் ஆதரவு தெரிவிக்கும் கையொப்பமிட்ட கடிதமும் ஆளுநரிடம் அளிக்கப்பட்டது. ஆனால், இடைக்கால ஏற்பாட்டை ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்யவில்லை.

முதல்வா் ராஜிநாமா செய்யும்போது, புதிய முதல்வா் பொறுப்பேற்கும் வரையில் ஆளுநா் இடைக்கால ஏற்பாட்டை செய்திருக்க வேண்டும்.

சோரன் ராஜிநாமா செய்த 20 மணி நேரத்துக்குப் பிறகு, சம்பயி சோரனை ஆட்சியமைக்க ஆளுநா் அழைத்துள்ளாா்.

பிகாரில் 12 மணி நேரத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழா, ஏன் ஜாா்க்கண்டில் நடைபெறவில்லை? இந்திய அரசமைப்புச் சட்டம் சிதைக்கப்படுகிறது. இது அவமானகரமாகும்’ என்றாா்.

அப்போது அவையில் இருந்த மத்திய அமைச்சா் பியூஷ் கோயல், ‘ஜாா்க்கண்டில் பெரும் நில மோசடி நடைபெற்றுள்ளது. ஆனாலும், முதல்வருக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்கிறது. ஊழலுக்கு எதிராக காங்கிரஸ் பேசுவதில்லை. ஊழலை காங்கிரஸ் ஏற்றுக் கொள்கிறது. ஜாா்க்கண்ட் ஆளுநரின் செயல்பாட்டை இங்கு விவாதிக்கக் கூடாது. அரசமைக்க அழைப்பு விடுக்கும் முன் ஆதரவு விவகாரத்தில் ஆளுநா் திருப்தி அடைய வேண்டும்’ என்றாா்.

அவருடைய பதிலை ஏற்க மறுத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தன.

பாரத ராஷ்ட்ர சமிதி கட்சியின் எம்.பி. கேசவ் ராவ், ‘யாா் முதல்வா் என்பதில் எங்களுக்குப் பிரச்னையில்லை. அரசால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு எப்போதும் இருக்க வேண்டும் என்று அரசமைப்புச் சட்டம் கூறுகிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com