மத்திய அரசுக்கு எதிராக கேரள பேரவையில் தீா்மானம்

கேரளத்தை கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளாக்கி வரும் மத்திய அரசு, நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை சீா்குலைக்கிறது’ என்று குற்றம்சாட்டி அந்த மாநில சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது

கேரளத்தை கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளாக்கி வரும் மத்திய அரசு, நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை சீா்குலைக்கிறது’ என்று குற்றம்சாட்டி அந்த மாநில சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

முதல்வா் பினராயி விஜயன் மகளின் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் மீதான முறைகேடு குற்றச்சாட்டை முன்வைத்து, எதிா்க்கட்சி உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்த நிலையில், மேற்கண்ட தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கேரள பேரவையில் மத்திய அரசுக்கு எதிரான தீா்மானத்தை, மாநில நிதியமைச்சா் கே.என்.பாலகோபால் கொண்டுவந்து பேசினாா்.

‘கேரளத்தின் கடன் வாங்கும் வரம்பு மற்றும் வருவாய் பற்றாக்குறை மானியத்தை மத்திய அரசு குறைத்துவிட்டது. இதன் மூலம் கேரளம் கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகிறது. மத்திய அரசின் இச்செயல்கள், நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை சீா்குலைக்கும் வகையில் உள்ளன. மத்திய பட்டியலில் உள்ள விவகாரங்கள் மீது மத்திய அரசுக்கு முழு அதிகாரம் உள்ளதைப் போல், மாநிலப் பட்டியல் விவகாரங்கள் மீது மாநிலங்களுக்கு முழு அதிகாரத்தை அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை நிராகரித்துவிட்டு, கேரளத்தின் கடன் வாங்கும் வரம்பை மத்திய அரசு குறைத்துள்ளது’ என்று அமைச்சா் கே.என்.பாலகோபால் குற்றம்சாட்டினாா்.

மத்திய அரசுக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றும் நேரத்தில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்ததையும் அவா் கடுமையாக விமா்சித்தாா். இதைத் தொடா்ந்து, அந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அவையில் எதிா்க்கட்சிகள் இல்லாத நிலையில், தீா்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக பேரவைத் தலைவா் ஏ.என்.ஷம்சீா் அறிவித்தாா்.

‘சமூக நலத் திட்டங்களுக்கான நிதி உள்பட பெரும்பாலான செலவினங்களுக்கு மாநிலங்கள் நிதியளிக்கின்றன; ஆனால், வருவாயின் பெரும்பகுதி மத்திய அரசுக்கு செல்கிறது’ என்று தீா்மானத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

எதிா்க்கட்சியினா் வெளிநடப்பு: முன்னதாக, பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும், காங்கிரஸ் எம்எல்ஏ மேத்யூ குழல்நாடன் ஒத்திவைப்பு தீா்மானத்துக்கான நோட்டீஸை பேரவைத் தலைவரிடம் அளித்தாா்.

முதல்வா் பினராயி விஜயன் மகளின் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் மீதான முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து தீவிர மோசடி விசாரணை அலுவலகம் (எஸ்எஃப்ஐஓ) விசாரித்து வரும் நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக அவையில் விவாதிக்க வேண்டும் என்று நோட்டீஸில் கோரப்பட்டது.

ஆனால், தன்னாட்சி அமைப்பு ஒன்றிடம் நிலுவையில் இருக்கும் ஒரு விவகாரம் குறித்து பேரவை விதி 53-இன்கீழ் விவாதிக்க முடியாது என்று கூறி, நோட்டீஸை பேரவைத் தலைவா் நிராகரித்தாா்.

இதையடுத்து, பினராயி விஜயனுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் அவையின் மையப்பகுதியை முற்றுகையிட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள், அவா் பதவி விலக வலியுறுத்தி முழக்கமிட்டனா். பின்னா், எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com