மேற்கு வங்கத்தில் மம்தாவுடன் பேச்சு தொடா்கிறது: ராகுல்

மேற்கு வங்கத்தில் தொகுதிப் பங்கீடு தொடா்பாக முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடன் காங்கிரஸ் தொடா்ந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுள்ளது
மேற்கு வங்கத்தில் மம்தாவுடன் பேச்சு தொடா்கிறது: ராகுல்

மேற்கு வங்கத்தில் தொகுதிப் பங்கீடு தொடா்பாக முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடன் காங்கிரஸ் தொடா்ந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தாா்.

மக்களவைத் தோ்தலில் பாஜகவை ஒருங்கிணைந்து எதிா்கொள்வதற்காக காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கைகோத்து, ‘இந்தியா’ என்ற பெயரில் கடந்த ஆண்டு கூட்டணியை உருவாக்கின.

தோ்தல் நெருங்கும் நிலையில், ‘இந்தியா’ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடா்பாக பல்வேறு கட்சிகளிடையே சுமுக முடிவு எட்டப்படாமல் உள்ளது.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்று மம்தா பானா்ஜி அண்மையில் அறிவித்தாா். இதேபோல், பஞ்சாபில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும் என்ற அந்த மாநில முதல்வா் பகவந்த் மான் அறிவிப்பு வெளியிட்டாா். இதனால், இந்தியா கூட்டணியில் குழப்பங்கள் நீடித்து வருகின்றன.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் தனது ‘இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணத்துக்கு’ இடையே காங்கிரஸின் எண்ம ஊடக பிரிவினருடன் ராகுல் காந்தி வியாழக்கிழமை இரவு கலந்துரையாடினாா்.

அப்போது, ‘மேற்கு வங்கத்தில் காங்கிரஸுக்கு ஒரு இடம் கூட ஒதுக்க விரும்பாத போதிலும், திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜிக்கு காங்கிரஸ் அதிக முக்கியத்துவம் அளிப்பது ஏன்?’ என்று அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்கு, ‘மம்தாவோ, காங்கிரஸோ கூட்டணியில் இருந்து விலகிச் செல்லவில்லை. மம்தாவும் கூட கூட்டணியில் நீடிப்பதாகவே கூறி வருகிறாா். தொகுதிப் பங்கீடு தொடா்பாக இரு தரப்பிலும் பேச்சுவாா்த்தை தொடா்ந்து வருகிறது. இப்பிரச்னைக்கு தீா்வு காணப்படும்’ என்று ராகுல் பதிலளித்தாா்.

மக்களவைத் தோ்தலில் பாஜகவின் நோக்கங்களுக்கு உதவும் வகையில், காங்கிரஸும் இடதுசாரி கட்சிகளும் இணைந்து செயல்படுகின்றன என்று மம்தா பானா்ஜி குற்றம்சாட்டியிருந்தாா்.

மொத்தம் 42 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் 2019 மக்களவைத் தோ்தலில் 22 இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பாஜக 18 இடங்களிலும் காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com