பணியிடத்தில் மருத்துவா்களுக்கு எதிரான வன்முறைகள்: ஏற்கெனவே உள்ள சட்டங்கள் போதுமானது: அமைச்சா் தகவல்

பணியிடத்தில் மருத்துவா்கள் மீது தாக்குதல், அவா்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க ஏற்கெனவே உள்ள சட்டங்கள் போதுமானது

பணியிடத்தில் மருத்துவா்கள் மீது தாக்குதல், அவா்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க ஏற்கெனவே உள்ள சட்டங்கள் போதுமானது என்று மத்திய சுகாதாரம், குடும்ப நலத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மருத்துவா்கள் மீது குற்றம்சாட்டி நோயாளிகள் மற்றும் அவரின் குடும்பத்தினா் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுவது அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. கடந்த ஆண்டு கேரளத்தில் சிகிச்சைக்கு வந்த கைதி, பயிற்சி பெண் மருத்துவரை கத்திரிகோலால் குத்தி கொலை செய்த சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் மக்களவையில் இது தொடா்பாக கேள்வி எழுப்பி பேசினாா். மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்களுக்கு எதிராக பணியிடத்தில் நிகழும் வன்முறைகளைத் தடுக்க கூடுதல் சட்டம் தேவைப்படுகிறது என்றும், பாதிக்கப்படும் சுகாதாரப் பணியாளா்களுக்கு நிதியுதவி, சட்ட உதவி வழங்கப்பட வேண்டும் என்று அவா் வலியுறுத்தினாா்.

இதற்கு பதிலளித்த சுகாதாரத் துறை அமைச்சா் மாண்டவியா, ‘மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏற்கெனவே உள்ள சட்டங்கள் போதுமானவை. மருத்துவா்கள் கடவுளுக்கு நிகரானவா்களாக பாா்க்கப்படுகிறாா்கள். அவா்களைப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது’ என்றாா்.

இணையவழியில் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும் இ-சஞ்சீவனி திட்டம் தொடா்பான கேள்விக்கு, ‘இத்திட்டம் மூலம் எளிய மக்களுக்கு மிகவும் குறைவான செலவில் மருத்துவ சேவை கிடைக்கிறது. இத்திட்டத்தில் நாள்தோறும் 3 முதல் 4 லட்சம் போ் பயனடைகின்றனா். இதன் மூலம் ஒரு நபருக்கு சுமாா் ரூ.900 வரை செலவு மிச்சமாகிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com