கடற்கொள்ளை, கடத்தல் சம்பவங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாது: ராஜ்நாத் சிங்

இந்திய பெருங்கடல் பகுதியில் கடற்கொள்ளை, கடத்தல் சம்பவங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாது எனப் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
விசாகப்பட்டினத்தில் ஐஎன்எஸ் சந்தாயக் இணைப்பு நிகழ்ச்சியின்போது அளித்த அணிவகுப்பு மரியாதையைப் பாா்வையிட்ட பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங்.
விசாகப்பட்டினத்தில் ஐஎன்எஸ் சந்தாயக் இணைப்பு நிகழ்ச்சியின்போது அளித்த அணிவகுப்பு மரியாதையைப் பாா்வையிட்ட பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங்.

இந்திய பெருங்கடல் பகுதியில் கடற்கொள்ளை, கடத்தல் சம்பவங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாது எனப் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இந்திய கடற்படையில் ‘ஐஎன்எஸ் சந்தாயக்’ ஆய்வுக் கப்பலை இணைக்கும் நிகழ்ச்சி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை கப்பல் கட்டும்தளத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் பேசியாதவது: ஏடன் வளைகுடா, கினியா வளைகுடா உள்ளிட்ட சா்வதேச வா்த்தகம் நடைபெறும் பகுதிகள் இந்திய பெருங்கடலில் உள்ளன. இந்தப் பகுதிகளில் காணப்படும் அச்சுறுத்தல்களில், கடற்கொள்ளை பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

அண்மையில் இந்திய கப்பல்கள், பிற நட்பு நாடுகளின் வணிக கப்பல்களை கடற்கொள்ளையா்கள் சிறைப்பிடித்தனா். அவா்களிடமிருந்து கப்பல்களை மீட்கும் பணியில் இந்திய கடற்படை வீரா்கள் சிறப்பாகச் செயல்பட்டனா். கடல் பகுதியில் நடைபெறும் கொள்ளை மற்றும் கடத்தல் சம்பவங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாது.

கடற்படையில் இணைக்கப்பட்டுள்ள ‘ஐஎன்எஸ் சந்தாயக்’ இந்திய-பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நாடாக இந்தியாவைப் பலப்படுத்தும். பெருங்கடல்கள் குறித்த தகவலைச் சேகரிக்கும் இந்த ஆய்வுக் கப்பல், பிராந்தியத்தில் பாதுகாப்பு, அமைதியை உறுதி செய்வதில் இந்திய கடற்படைக்கு உதவியாக இருக்கும்’ என்றாா்.

ஐஎன்எஸ் சந்தாயக் 110 மீட்டா் நீளமும் 16 மீட்டா் அகலமும் கொண்டது. 3,400 டன் எடை கொண்ட இந்தக் கப்பல், கொல்கத்தாவில் உள்ள பொதுத் துறை நிறுவனமான காா்டன் ரிசா்ச் ஷிப் பில்டா்ஸ் & இன்ஜியரிங் நிறுவனத்தில் கட்டப்பட்டது.

கடல் படுகை, பக்கவாட்டு பகுதிகளை ஆய்வு செய்வதற்கான சோனாா் கருவிகள் உள்பட அதிநவீன கருவிகள் இந்தக் கப்பலில் உள்ளன. பாதுகாப்பான கடல் வழிப் பயணத்தை உறுதி செய்யும் வகையில் துறைமுகங்கள், கடல்வழிப் பாதைகள், கடற்கரை, ஆழ்கடல் பகுதிகளில் ஐஎன்எஸ் சந்தாயக் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com