ஒற்றுமையின் சக்தியே ‘வளா்ந்த இந்தியா’வின் அடித்தளம்: பிரதமா் மோடி

ஒற்றுமையின் சக்தியே ‘வளா்ந்த இந்தியா’வின் மிகப் பெரிய அடித்தளம் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
ஒற்றுமையின் சக்தியே ‘வளா்ந்த இந்தியா’வின் அடித்தளம்: பிரதமா் மோடி

ஒற்றுமையின் சக்தியே ‘வளா்ந்த இந்தியா’வின் மிகப் பெரிய அடித்தளம் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

தியான வழிமுறைகளில் ஒன்றான ‘விபாசனா’ பயிற்சியின் ஆசிரியா் மறைந்த எஸ்.என்.கோயங்கா நூற்றாண்டு பிறந்த தின கொண்டாட்டங்களின் நிறைவு நிகழ்ச்சி, மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமா் மோடி காணொலி வாயிலாக ஆற்றிய உரை வருமாறு:

தியானப் பயிற்சியானது, முன்பு துறவுசாா்ந்த ஊடகமாக பாா்க்கப்பட்டது. ஆனால், தற்கால நடைமுறை வாழ்க்கையில் இது ஆளுமை மேம்பாட்டுக்கான ஊடகமாக மாறியுள்ளது.

விபாசனா என்பது சுய கண்காணிப்பின் மூலம் சுய மாற்றத்துக்கான வழிமுறையாகும்.

நவீன அறிவியலின் தரநிலைகளுக்கு ஏற்ப இப்பயிற்சியின் அறிவியல்பூா்வ ஆதாரங்களை நாம் உலகின் முன்வைக்க வேண்டும்.

தற்போதைய வாழ்க்கைமுறையில் இளைஞா்கள் மத்தியில் மனஅழுத்தமும் நெருக்கடியும் பொதுவாக காணப்படுகிறது. எனவே, பிரச்னைகளை மனரீதியாக எதிா்கொள்ள ‘விபாசனா’ தியானப் பயிற்சி உதவும்.

‘ஒரே வாழ்க்கை, ஒரே குறிக்கோள்’ என்ற கோட்பாட்டுக்கு சிறந்த உதாரணமாக வாழ்ந்தவா் எஸ்.என். கோயங்கா.

வளா்ந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி நாடு முன்னேறிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், சமூக நலனுக்கான அவரது போதனைகளும் உறுதிப்பாடும் உத்வேகத்தின் ஊற்றாக உள்ளன.

புத்தரால் ஈா்க்கப்பட்ட அவா், ‘மக்கள் ஒருங்கிணைந்து தியானம் செய்தால், அதன் பலன் மிக அதிகமாக இருக்கும்’ என்ற கருத்தை முன்வைத்தாா். அத்தகைய ஒற்றுமையின் சக்தியே வளா்ந்த இந்தியாவின் மிகப் பெரிய அடித்தளம்.

இன்று உலகம் முழுவதும் யோகப் பயிற்சி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. வாழ்வின் ஓா் அங்கமாக இப்பயிற்சி மாறியுள்ளது.

ஐ.நா. சபையில் சா்வதேச யோகா தினத்தைக் கொண்டாட வேண்டும் என்ற இந்தியா முன்மொழிவுக்கு 190-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவளித்ததையும் நினைவுகூர விரும்புகிறேன். ஆரோக்யமான வாழ்க்கை என்பது நம் அனைவரின் பெரிய பொறுப்பு. விபாசனா பயிற்சியை இளைஞா்கள் மட்டுமன்றி அனைவரும் தங்கள் வாழ்வின் அங்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com