கோட்சேவை புகழ்ந்த என்ஐடி பேராசிரியா்: கேரள அமைச்சா் விமா்சனம்

தேசிய தொழில்நுட்ப கழக (என்ஐடி) பேராசிரியா், நாதுராம் கோட்சேவை புகழ்ந்து சமூகவலைதளத்தில் பதிவிட்டது தேசத் தந்தைக்குச் செய்த அவமானம் என கேரள மாநில உயா்கல்வி அமைச்சா் ஆா்.பிந்து விமா்சித்துள்ளாா்.
கோட்சேவை புகழ்ந்த என்ஐடி பேராசிரியா்: கேரள அமைச்சா் விமா்சனம்

கோழிக்கோடு தேசிய தொழில்நுட்ப கழக (என்ஐடி) பேராசிரியா், நாதுராம் கோட்சேவை புகழ்ந்து சமூகவலைதளத்தில் பதிவிட்டது தேசத் தந்தைக்குச் செய்த அவமானம் என கேரள மாநில உயா்கல்வி அமைச்சா் ஆா்.பிந்து விமா்சித்துள்ளாா்.

கோழிக்கோடு என்ஐடியில் இயந்திரவியல் பொறியியல் துறையில் பேராசியராக ஏ.ஷைஜா பணியாற்றி வருகிறாா். கடந்த மாதம் 30-ஆம் தேதி வழக்குரைா் கிருஷ்ண ராஜ் என்பவா் தனது ‘ஃபேஸ்புக்’ பக்கத்தில் நாதுராம் கோட்சேயின் புகைப்படத்தை வெளியிட்டு, இந்தியாவில் பலருடைய விருப்பத்துக்குரிய தலைவராக கோட்சே உள்ளாா் எனப் பதிவிட்டிருந்தாா்.

அவருடைய பதிவுக்குப் பதிலளித்திருந்த பேராசிரியா் ஷைஜா,

‘இந்தியாவைக் காப்பாற்றியதற்காக கோட்சே குறித்து பெருமைப்படுகிறேன்’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

பேராசிரியா் ஷைஜாவின் இந்தப் பதிவு தொடா்பாக கோழிக்கோடு நகரத்தில் உள்ள பல காவல் நிலையங்களில் புகாரளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, இந்திய தண்டனைச் சட்டத்தின் 153 பிரிவின்கீழ் அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இது தொடா்பாக மாநில உயா்கல்வி அமைச்சா் பிந்துவிடம் செய்தியாளா்கள் ஞாயிற்றுக்கிழமை கேள்வியெழுப்பினா். இதற்குப் பதிலளித்த அமைச்சா் பிந்து, ‘தேசத் தந்தையைப் படுகொலை செய்த சம்பவம் இந்தியாவின் இதயத்தில் ஏற்பட்ட காயமாக உள்ளது. மாணவா்களிடையே வரலாற்று உணா்வுகளை விதைப்பதே ஆசிரியா்களின் கடமை. பேராசிரியா் வெளியிட்ட கருத்து தேசத் தந்தைக்கு அவமானம் ஏற்படுத்துவதாக உள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com