அயோத்தியில் ராமர் கோயிலும் மசூதியும் மதச்சார்பின்மையை வலுப்படுத்தும்: கேரள முஸ்லிம் லீக் கட்சித் தலைவர்

நாட்டில் மதச்சார்பின்மையை வலுப்படுத்தும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கேரள மாநிலத் தலைவர் பாணக்காடு சயீத் சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அயோத்தியில் ராமர் கோயிலும் மசூதியும் மதச்சார்பின்மையை வலுப்படுத்தும்: கேரள முஸ்லிம் லீக் கட்சித் தலைவர்

அயோத்தியில் உள்ள ராமர் கோயிலும் அங்கு கட்டப்பட உள்ள மசூதியும் நாட்டில் மதச்சார்பின்மையை வலுப்படுத்தும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கேரள மாநிலத் தலைவர் பாணக்காடு சயீத் சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் முஸ்லிம் லீக் முக்கிய கூட்டணிக் கட்சியாக உள்ளது. இக்கட்சி முஸ்லிம் சமூகத்தினரிடையே செல்வாக்குடன் திகழ்கிறது. 

இக்கட்சியின் மாநிலத் தலைவரான பாணக்காடு சயீத் சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள் அண்மையில் கேரள மாநிலம், மலப்புறத்துக்கு அருகில் உள்ள மஞ்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார். அவரது பேச்சு அடங்கிய காணொலி ஞாயிற்றுக்கிழமை வேகமாகப் பரவியது. அவர் பேசியிருப்பதாவது:

நாட்டு மக்களால் வணங்கப்படுவதும் மதிக்கப்படுவதுமான ஸ்ரீராமர் கோயில் ஒரு எதார்த்த உண்மையாகும். ஸ்ரீராமர் கோயிலை எதிர்த்து நாம் போராட வேண்டிய அவசியம் இல்லை. நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தியில் ஸ்ரீராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட உள்ளது. இந்த இரண்டும் தற்போது இந்தியாவின் அங்கமாகும். ஸ்ரீராமர் கோயிலும் அயோத்தியில் கட்டப்பட உள்ள பாபர் மசூதியும் நமது நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான இரண்டு சிறந்த உதாரணங்களாகும்.

ஏற்கெனவே அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது என்பதும் அந்த நேரத்தில் நாம் அதை எதிர்த்தோம் என்பதும் தெரியும். இந்த விவகாரத்தை இந்திய முஸ்லிம்கள் முதிர்ச்சியான முறையில் கையாண்டனர் என்றார்.

இந்நிலையில், அவரது இந்தக் கருத்து கேரள அரசியல் அரங்கில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஷிஹாப் தங்ஙளின் கருத்தை கேரளத்தை ஆளும் இடதுசாரிக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய தேசிய லீக் கட்சியின் கேரள மாநில செயற்குழு உறுப்பினர் என்.கே.அப்துல் அஜீஸ் விமர்சித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் முகநூலில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
மகாத்மா காந்தியின் ராமராஜ்யம் என்பது ஆர்எஸ்எஸ் அமைப்பின் ராமராஜ்யத்தில் இருந்து வேறுபட்டது என்ற உண்மையை அரசியல் தலைவர்கள் அறியாமல் இல்லை. 

கடவுள் நம்பிக்கை கொண்ட ஒருவரது ஆன்மிக ஹிந்து மதம் என்பது ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் ஹிந்துத்துவத்தில் இருந்து வேறுபட்டது. 
இது அரசியல் தலைவர்களுக்குத் தெரியும். முஸ்லிம் லீகின் சாதாரணத் தொண்டர்கள் இந்த (தங்களின்) நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்ப வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் ஷிஹாப் தங்கள் தெரிவித்த கருத்தை காங்கிரஸும் முஸ்லிம் லீக்கும் ஆதரித்துள்ளன.

இது தொடர்பாக அக்கட்சிகள் கருத்து தெரிவிக்கையில் "வெறுப்பூட்டும் பிரசாரத்தையும் சமூகத்தைப் பிளவுபடுத்தும் முயற்சிகளையும் தடுக்க அவர் முயற்சித்துள்ளார்' என்று கூறியுள்ளன. 

இதனிடையே, கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசனும் முஸ்லிம் லீக் கட்சியின் மூத்த தலைவர் பி.கே.குஞ்ஞாலிக்குட்டியும் தங்ஙளின் கருத்தை ஆதரித்துள்ளனர். 

குஞ்ஞாலிக்குட்டி கூறுகையில், "அயோத்தி பிரச்னையை அரசியலாக்க பாஜக முயற்சிக்கிறது. அந்த வலையில் சிக்க வேண்டாம் என்று மக்களை எச்சரிக்க தங்ஙள் முயற்சித்துள்ளார். ஆனால், அவரது கருத்து தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது' என்றார்.

வி.டி.சதீசன் கூறுகையில் "பலரும் தேவையில்லாமல் பதற்றத்தைத் தூண்ட முயற்சிக்கும்போது அதைத் தணிக்க தங்ஙள் முயன்றுள்ளார். வெறுப்பூட்டும் பிரசாரத்துக்கும் பிரிவினைக்கும் எதிராக அவர் பேசியுள்ளார்' என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com