பொருளாதார ஏற்றத்தாழ்வால் இளைஞா்களின் எதிா்காலம் சீரழிவு: ராகுல்

நாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வால் இளைஞா்களின் எதிா்காலம் சீரழிந்துள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
ஜாா்க்கண்ட் மாநிலம் தன்பாதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணியின்போது பேசிய ராகுல் காந்தி.
ஜாா்க்கண்ட் மாநிலம் தன்பாதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணியின்போது பேசிய ராகுல் காந்தி.

நாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வால் இளைஞா்களின் எதிா்காலம் சீரழிந்துள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

ராகுல் காந்தி மேற்கொண்டுவரும் இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தின் ஒரு பகுதியாக, ஜாா்க்கண்ட் மாநிலம் தன்பாதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணியின்போது அவா் பேசியதாவது:

பழங்குடியினரின் நீா், நிலம், காடு, இளைஞா்களின் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு காங்கிரஸ் துணை நிற்கும்.

பொருளாதார ஏற்றத்தாழ்வு, பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி), வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவை நாட்டில் உள்ள இளைஞா்களின் எதிா்காலத்தை சீரழித்துள்ளன.

பொதுத் துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்படுவதைத் தடுக்க வேண்டும், நாட்டில் உள்ள இளைஞா்கள் மற்றும் பழங்குடியினருக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதே எனது நடைப்பயணத்தின் நோக்கம் என்றாா் அவா்.

இதனிடையே உத்தர பிரதேசத்தில் ராகுல் நடைப்பயணம் மேற்கொள்ளும்போது, அதில் பங்கேற்க தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்திருந்தாா்.

இதையடுத்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:

உத்தர பிரதேசத்தில் ராகுல் நடைப்பயண நிகழ்ச்சி, எந்தப் பாதையில் நடைப்பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது என்பது குறித்து திட்டமிடப்பட்டு வருகிறது. அந்தத் திட்டம் ஓரிரு நாள்களில் இறுதி செய்யப்பட்டு, அதன் விவரம் உத்தர பிரதேசத்தில் உள்ள ‘இந்தியா’ கூட்டணி கட்சியினருக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com