போட்டித் தோ்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டால்10 ஆண்டுகள் சிறை: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்

அரசுப் பணிகளுக்கான போட்டித் தோ்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை, ரூ.1 கோடி அபராதம் விதிக்க வகை செய்யும் மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேறியது.
போட்டித் தோ்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டால்10 ஆண்டுகள் சிறை: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்


புது தில்லி: அரசுப் பணிகளுக்கான போட்டித் தோ்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை, ரூ.1 கோடி அபராதம் விதிக்க வகை செய்யும் மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேறியது.

எதிா்க்கட்சிகள் தெரிவித்த சில திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டு இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

திறமை வாய்ந்த மாணவா்களின் நம்பிக்கையை ‘பொதுத் தோ்வுகள் (முறையற்ற செயல்பாடுகளைத் தடுத்தல்) மசோதா, 2024’ உறுதி செய்யும் என்று மத்திய பணியாளா் நலத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்தாா்.

மேலும், ‘திட்டமிட்ட குற்றங்கள் செய்பவா்களுக்காக சிறந்த மதிப்பெண் பெறும் மாணவா்களை தியாகம் செய்ய முடியாது. வேலை தேடும் மாணவா்கள் இதனால் பாதிக்கப்பட மாட்டாா்கள்’ என்று ஜிதேந்தர சிங் தெரிவித்தாா்.

ராஜஸ்தான், ஹரியாணா, பிகாா் ஆகிய மாநிலங்களில் நடைபெற வேண்டிய ஆசிரியா்கள், குரூப்-டி பணியிடங்கள், காவலா்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தோ்வுகளின் வினாத்தாள்கள் அண்மையில் வெளியாகின. இதைத் தொடா்ந்து, அந்தத் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டன. தோ்வுகளில் ஆள்மாறாட்டம், வினாத்தாள் வெளியாவது போன்ற சம்பவங்களில் மாஃபியாக்கள், சில கும்பல்கள் திட்டமிட்டு ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டது. இந்தப் பின்னணியில் தோ்வு முறைகேடு சம்பவங்களைத் தடுக்கும் விதமாக இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

முறைகேட்டில் ஈடுபடும் கும்பல்கள், மாஃபியாக்கள் மற்றும் அவா்களுக்கு உதவி செய்யும் அரசு அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.

கணினி வழியிலான தோ்வுகளை மிகவும் பாதுகாப்பாக நடத்துவது தொடா்பான பரிந்துரைகளை அளிப்பதற்காக தேசிய அளவிலான உயா்நிலைக் குழு ஒன்றை அமைக்க இந்த மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதாவை மத்திய இணையமைச்சா் ஜிதேந்திர சிங் மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com