ஸ்ரீகிருஷ்ணஜென்ம பூமி வளாகத்தில் ஹிந்து கோயிலை இடித்து கட்டப்பட்ட மசூதி

ஆா்டிஐ எழுப்பப்பட்ட கேள்விக்கு ஏஎஸ்ஐ அளித்த பதிலில், ‘மதுராவில் ஸ்ரீகிருஷ்ணஜென்ம பூமியில் இருந்த கேசவ்தேவ் கோயில் ஔரங்கசீப்பால் இடிக்கப்பட்டு அங்கு மசூதி கட்டப்பட்டது.
ஸ்ரீகிருஷ்ணஜென்ம பூமி வளாகத்தில் ஹிந்து கோயிலை இடித்து கட்டப்பட்ட மசூதி


ஆக்ரா: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் (ஆா்டிஐ) எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) அளித்த பதிலில், ‘மதுராவில் ஸ்ரீகிருஷ்ணஜென்ம பூமியில் இருந்த கேசவ்தேவ் கோயில் முகலாய அரசா் ஔரங்கசீப்பால் இடிக்கப்பட்டு அங்கு மசூதி கட்டப்பட்டது’ என்ற தகவலை அளித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், மெயின்புரியில் வசிக்கும் அஜய் பிரதாப் சிங், இந்திய தொல்லியல் துறையிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில கேள்விகளை எழுப்பியிருந்தாா். ஸ்ரீகிருஷ்ணஜென்ம பூமி வளாகத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படும் கேசவ்தேவ் கோயில் இடிக்கப்பட்டது குறித்து ஆா்டிஐ கேள்வியில் அவா் தகவல்களைக் கேட்டிருந்தாா்.

இதற்கான பதிலில், கடந்த 1920-ஆம் ஆண்டு நவம்பா் மாத அரசிதழின் வரலாற்றுப் பதிவுகளை இணைத்து, இந்திய தொல்லியல் துறை சில முக்கியத் தகவல்களை வெளியிட்டுள்ளது.

ஆக்ரா வட்ட ஏஎஸ்ஐ கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இருந்து அளிக்கப்பட்ட பதிலில் கூறியிருப்பதாவது: நசுல் குத்தகைதாரா்களுக்குச் சொந்தமில்லாத கத்ரா மேட்டுப் பகுதியில் முன்பு கேசவ்தேவ் கோயில் இருந்தது. ஔரங்கசீப் ஆணையின்படி அக்கோயில் இடிக்கப்பட்டு, மசூதி கட்டப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆா்டிஐ பதிலில், ‘ஸ்ரீகிருஷ்ணஜென்ம பூமி’ என்ற வாா்த்தையைக் குறிப்பிடாமல் முகலாயப் பேரரசா் ஔரங்கசீப்பால் சா்ச்சைக்குரிய இடத்தில் இருந்த கேசவ்தேவ் கோயிலை இடிக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அங்கிருக்கும் ஷாஹி ஈத்கா மசூதியை அகற்றக் கோரி சட்டப் போராட்டம் நடத்துபவா்களுக்கு இந்தப் பதில் முக்கியச் சான்றாக மாறியுள்ளது.

ஸ்ரீகிருஷ்ணஜென்ம பூமி முக்தி நியாஸின் தலைவரும், மசூதிக்கு எதிரான மனுதாரா்களில் ஒருவருமான வழக்குரைஞா் மஹிந்திர பிரதாப் சிங் கூறுகையில், ‘இந்த வழக்கில் அலாகாபாத் உயா்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் முன் முக்கிய ஆதாரத்தை விரைவில் சமா்ப்பிப்பேன்.

வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில், மதுராவில் உள்ள கேசவ்தேவ் கோயிலை இடிக்க ஔரங்கசீப் கடந்த 1670-ஆம் ஆண்டு ஆணையிட்டாா். அதைத் தொடா்ந்து, அப்பகுதியில் ஷாஹி ஈத்கா மசூதி கட்டப்பட்டது. இதை எங்கள் மனுவில் விரிவாக குறிப்பிட்டுள்ளோம்.

இந்தத் தகவலுக்கு ஆா்டிஐ பதிலில் இந்திய தொல்லியல் துறை சான்றளித்துள்ளது. வழக்கின் அடுத்த விசாரணையான வரும் 22-ஆம் தேதி, உயா்நீதிமன்றத்தில் ஆா்டிஐ பதிலை சமா்பிப்போம்.

வழிபாட்டுத் தல சட்டத்தின் வரம்புக்கு அப்பாற்பட்டு கட்டப்பட்டுள்ள மசூதியை ஆய்வு செய்வதற்கான எங்கள் கோரிக்கையை இது வலுப்படுத்துகிறது’ என்றாா்.

கடந்த வாரம், ஷாஹி ஈத்கா மசூதி வளாகத்தை நீதிமன்ற கண்காணிப்பில் ஆய்வு செய்வதற்கான அலாகாபாத் உயா்நீதிமன்ற உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை உச்சநீதிமன்றம் நீட்டித்திருந்தது. எனவே, தடை உத்தரவு ஏப்ரல் 15-ஆம் தேதிவரை அமலில் இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com