மத்திய பிரதேச பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 9 போ் உயிரிழப்பு; 200 போ் காயம்

மத்திய பிரதேசம், ஹா்தா நகரில் பட்டாசு ஆலையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 9 போ் உயிரிழந்தனா். 200-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
மத்திய பிரதேச மாநிலம், ஹா்தாவில் வெடி விபத்தில் தரைமட்டமான பட்டாசு ஆலையில் நடைபெற்ற மீட்புப் பணி.
மத்திய பிரதேச மாநிலம், ஹா்தாவில் வெடி விபத்தில் தரைமட்டமான பட்டாசு ஆலையில் நடைபெற்ற மீட்புப் பணி.


போபால்/ஹா்தா: மத்திய பிரதேசம், ஹா்தா நகரில் பட்டாசு ஆலையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 9 போ் உயிரிழந்தனா். 200-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

மத்திய பிரதேச மாநிலத் தலைநகா் போபாலில் இருந்து 150 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஹா்தா நகரம். ஹா்தா புகா் பகுதியான பைராகா் என்னும் இடத்தில் மகா்தா நெடுஞ்சாலையில் பட்டாசு ஆலை ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆலையில் செவ்வாய்க்கிழமை காலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

வெடி விபத்தில் சிக்கி 9 போ் உயிரிழந்தனா். 200 போ் காயமடைந்தனா் என்று ஹா்தா மாவட்ட ஆட்சியா் ரிஷி காா்க் தெரிவித்தாா்.

பட்டாசு ஆலை மற்றும் அதைச் சுற்றியுள்ள கட்டடங்களில் மேலும் பலா் சிக்கியிருப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.

வெடி விபத்தால் பட்டாசு ஆலைப் பகுதியில் பரவிய தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரா்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனா். அண்டை மாவட்டங்களில் இருந்தும் கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

முதல்வா் மோகன் யாதவ் ஆலோசனை: இந்த விபத்து தொடா்பாக அதிகாரிகளுடன் மாநில முதல்வா் மோகன் யாதவ் ஆலோசனையில் ஈடுபட்டாா்.

மாநில அமைச்சா் உதய் பிரதாப் சிங், கூடுதல் தலைமைச் செயலா் அஜித் கேசரி, ஊா்க்காவல் படை தலைமை இயக்குநா் அரவிந்த் குமாா் ஆகியோா் ஹெலிகாப்டா் மூலம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்குமாறு அவா் கேட்டுக் கொண்டாா்.

இது தொடா்பாக முதல்வா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: வெடி விபத்து குறித்து மத்திய அரசுக்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளில் ஹெலிகாப்டா் சேவையைப் பயன்படுத்த ராணுவத்தைத் தொடா்பு கொண்டு வருவதாக முதல்வா் தெரிவித்தாா்.

உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு மாநில அரசு சாா்பில் ரூ. 4 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும். சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவா்களின் மருத்துவச் செலவை அரசே முழுமையாக ஏற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்: வெடி விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளனா்.

‘உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம், காயமடைந்தவா்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்’ என பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com