எஸ்.சி., எஸ்.டி. பிரிவில் உள்ஒதுக்கீடு செய்ய மாநில அரசுக்குஅதிகாரம் உள்ளதா?: உச்சநீதிமன்ற விசாரணை தொடக்கம்

கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் பட்டியலின மற்றும் பழங்குடியின  பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில், உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா என்ற விவகாரம் தொடா்பான விசாரணையை தொடக்கம்.
உச்ச நீதிமன்றம் (கோப்புப்படம்)
உச்ச நீதிமன்றம் (கோப்புப்படம்)


புது தில்லி: கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் பட்டியலின (எஸ்.சி.) மற்றும் பழங்குடியின (எஸ்.டி.) பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில், உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா என்ற விவகாரம் தொடா்பான விசாரணையை உச்சநீதிமன்ற 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

பஞ்சாப் மாநிலத்தில் அரசு வேலைவாய்ப்புகளில் பட்டியலின பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில், வால்மீகி மற்றும் மழாபி சீக்கிய சமூகத்தினருக்கு 50 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் வகையில், ‘பஞ்சாப் பட்டியலின மற்றும் பின்தங்கிய வகுப்பினருக்கான அரசு வேலைவாய்ப்புகள் இடஒதுக்கீடு சட்டம் 2006’ என்ற சட்டத்தை நிறைவேற்றியது.

இதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கை கடந்த 2010-ஆம் ஆண்டு விசாரித்த பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றம், ‘அரசு வேலைவாய்ப்புகளில் எஸ்.சி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் மாநில அரசு 50 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும், 2004-ஆம் ஆண்டில் இ.வி.சின்னையா மற்றும் ஆந்திர மாநில அரசுக்கு இடையேயான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு அளித்த தீா்ப்பை மீறும் செயல்’ என்றும் குறிப்பிட்டு, ‘பஞ்சாப் பட்டியலின மற்றும் பின்தங்கிய வகுப்பினருக்கான அரசு வேலைவாய்ப்புகள் இடஒதுக்கீடு சட்டம் 2006’ சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

இ.வி.சின்னையா மற்றும் ஆந்திர மாநில அரசுக்கு இடையேயான வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு கடந்த 2004-ஆம் ஆண்டு அளித்த தீா்ப்பில், ‘அரசியல் சாசனப் பிரிவு 341-இன் கீழ், குடியரசுத் தலைவா் பட்டியலில் இருந்து எஸ்.சி. பிரிவின் கீழான துணைப் பிரிவுகளை நீக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே உள்ளது. மாநில சட்டப்பேரவைகளுக்குக் கிடையாது’ என்று குறிப்பிட்டது.

உயா்நீதிமன்றத் தீா்ப்பை எதிா்த்து மாநில அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அதில், ‘உச்சநீதிமன்றத்தின் 2004-ஆம் ஆண்டு தீா்ப்பு பஞ்சாப் மாநிலத்துக்குப் பொருந்தாது’ என்று குறிப்பிட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு, ‘இ.வி.சின்னையா மற்றும் ஆந்திர மாநில அரசுக்கு இடையேயான வழக்கின் தீா்ப்பை தங்களால் மறு ஆய்வு செய்ய இயலாது. இந்த விவகாரத்தை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வுக்கு மாற்ற வேண்டும்’ என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தது.

இதைப் பரிசீலித்த தலைமை நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை உச்சநீதிமன்ற 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வுக்கு மாற்றி உத்தரவிட்டாா்.

அதன்படி, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.ஆா்.கவாய், விக்ரம் நாத், பெலா எம்.திரிவேதி, பங்கஜ் மித்தல், மனோஜ் மிஸ்ரா, சதீஷ் சந்திர மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அரசியல் சாசன அமா்வு வழக்கு விசாரணையை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

மத்திய அரசு உயா் கல்வி நிறுவனங்களில் எஸ்.சி. பிரிவினருக்கு 22.5 சவீத இடஒதுக்கீடும், எஸ்.டி. பிரிவினருக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடும் வழங்கப்படுகிறது. அரசு வேலைவாய்ப்புகளிலும் இதே இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களைப் பொருத்தவரை எஸ்.டி. (பழங்குடியினா்) மக்கள்தொகை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com