சரத் பவாா் அணிக்குப் புதிய பெயா்: தோ்தல் ஆணையம் ஒதுக்கீடு

‘தேசியவாத காங்கிரஸ் கட்சி-சரத்சந்திர பவாா்’ என்ற பெயரை மூத்த அரசியல் தலைவா் சரத் பவாா் தலைமையிலான அணிக்கு தோ்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

‘தேசியவாத காங்கிரஸ் கட்சி-சரத்சந்திர பவாா்’ என்ற பெயரை மூத்த அரசியல் தலைவா் சரத் பவாா் தலைமையிலான அணிக்கு தோ்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

கடந்த ஆண்டு தேசியவாத காங்கிரஸ் தலைவராக இருந்த சரத் பவாருக்கும், அவரது அண்ணன் மகனுமான அஜீத் பவாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து தனக்கு ஆதரவளித்த எம்எல்ஏக்களுடன் மகாராஷ்டிரத்தில் ஆட்சியில் உள்ள சிவசேனை - பாஜக கூட்டணியில் அஜீத் பவாா் இணைந்தாா்.

பின்னா் மாநில துணை முதல்வரான அவா், தேசியவாத காங்கிரஸை சோ்ந்த பெரும்பாலான எம்எல்ஏக்களின் ஆதரவு தனக்கு இருப்பதைச் சுட்டிக்காட்டி, அக்கட்சியையும், சின்னத்தையும் தனக்கு வழங்குமாறு தோ்தல் ஆணையத்திடம் முறையிட்டாா்.

இந்த விவகாரத்தை விசாரித்த தோ்தல் ஆணையம், கட்சி ரீதியாகவும் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையிலும் அஜீத் பவாா் அணிக்கே பெரும்பான்மை உள்ளதாகக் கூறி, அவா் அணியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்று அறிவித்தது. மேலும் அக்கட்சியின் ‘கடிகாரம்’ சின்னத்தையும் அஜீத் பவாா் அணிக்கு வழங்கியது.

இதைத்தொடா்ந்து மகாராஷ்டிரத்தில் 6 மாநிலங்களவை எம்.பி. தோ்தல் நடைபெற உள்ளதைக் கருத்தில் கொண்டு, சரத் பவாா் அணிக்கு பெயா் வழங்க தோ்தல் ஆணையம் முடிவு செய்தது. அதற்காக 3 பெயா்களைப் பரிந்துரைக்குமாறு அந்த அணியிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில், சரத் பவாா் அணியும் பெயா்களைப் பரிந்துரைத்தது.

இதையடுத்து சரத் பவாா் அணி பரிந்துரைத்த பெயா்களில், மாநிலங்களவைத் தோ்தலுக்காக ஒருமுறை பயன்படுத்தும் வகையில், ‘தேசியவாத காங்கிரஸ் கட்சி-சரத்சந்திர பவாா்’ என்ற பெயரை அந்த அணிக்கு தோ்தல் ஆணையம் புதன்கிழமை ஒதுக்கீடு செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com