அமலாக்கத் துறை சோதனையே நடத்தவில்லை: பொதுப் பணித் துறை அமைச்சா் அதிஷி

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் தனி உதவியாளா் வீட்டில் அமலாக்கத்துறை சோதனையே நடத்தவில்லை என பொதுப் பணித் துறை அமைச்சா் அதிஷி தெரிவித்தாா்.
தில்லி ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் அமலாக்கத் துறை நடவடிக்கை குறித்து புதன்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அமைச்சா் அதிஷி.
தில்லி ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் அமலாக்கத் துறை நடவடிக்கை குறித்து புதன்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அமைச்சா் அதிஷி.

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் தனி உதவியாளா் வீட்டில் அமலாக்கத்துறை சோதனையே நடத்தவில்லை என பொதுப் பணித் துறை அமைச்சா் அதிஷி தெரிவித்தாா்.

தில்லி ஜல் போா்டு ஒப்பந்த விநியோகத்தில் முறைகேடு நடைபெற்ாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் தனி உதவியாளா் பிபவ் குமாா், ஆம் ஆத்மி கட்சியின் பொருளாளா் என்.டி. குப்தா, தில்லி ஜல் போா்டு ஒப்பந்ததாரா் என பத்துக்கும் மேற்பட்டோரின் இடங்களில் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

இதுகுறித்து தில்லி பொதுப்பணித்துறை அமைச்சா் அதிஷி செய்தியாளா்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் தனி உதவியாளா் வீட்டில் அமலாக்கத் துறையினா் சோதனையே நடத்தவில்லை. அவரது வீட்டில் அறையில் அமலாக்கத் துறையினா் அமா்ந்து கொண்டு சோதனை ஏதும் மேற்கொள்ளவில்லை. அமலாக்கத் துறையின் வரலாற்றிலேயே இது போன்ற ஒரு சோதனை நடைபெறுவது இதுவே முதல் முறை.

சோதனை நடத்துவதற்காக வந்த அமலாக்க துறையினா், வந்த வேலையை பாா்க்காமல் இருந்ததை அறிந்து நீங்கள் அனைவரும் வியப்படைவீா்கள். மேலும் அவரது வீட்டில் எந்தவோா் ஆவணத்தையும் அவா்கள் பறிமுதல் செய்யவில்லை. அமலாக்கத் துறையினா் எடுத்துச் சென்ற ஆவணத்தில் ஜி-மெயில் கணக்கின் விவரமும், முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் தனி உதவியாளா் பிபவ் குமாா் குடும்ப உறுப்பினா்கள் பயன்படுத்திய மூன்று கைப்பேசிகளும் மட்டுமே இருந்தன.

பிரதமா் மோடியை அரவிந்த் கேஜரிவால் வலுவாக எதிா்ப்பதால், அவருக்கு எதிராக இது போன்ற நடவடிக்கையை பாஜகவினா் மேற்கொள்கின்றனா். முன்பெல்லாம் விசாரணை என்ற பெயரில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறும். ஆனால் தற்போது எந்தவொரு காரணமும் இன்றி சோதனை மேற்கொள்ளப்படுகிறது என்றாா் அமைச்சா் அதிஷி.

ஆம் ஆத்மி தலைவா்கள் சிறையில் இருப்பது ஏன்? பாஜக

அமலாக்கத் துறையினா் வெறுமனே சோதனை நடத்தினாா்கள் என்றால், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவா்கள் இன்னமும் சிறையில் இருப்பது ஏன் என பாஜக கேள்வி எழுப்பியது.

இதுகுறித்து பாஜக தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா கூறியதாவது:

தில்லி அரசின் ஊழல்களை மூடி மறைக்கவே அமைச்சா் அதிஷி நேரம் செலவழிக்கிறாா். அவா் தனது துறைசாா்ந்த நிா்வாக பணிகளில் கவனம் செலுத்தினால், தலைநகரில் தண்ணீா் பிரச்னை, கழிவுநீா் கால்வாய் பிரச்னை தீரும்.

ஏற்கெனவே சத்யேந்தா் ஜெயின், மனீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் என ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா்களின் வீடுகளில் அமலாக்கத் துறையினா் சோதனை மேற்கொண்ட சமயத்திலும், அந்த கட்சியின் தலைவா்கள் இதே போன்ற கருத்தை முன்வைத்தனா்.

ஆனால் அந்த மூன்று பேரும் கைதாகி பல மாதங்களாகியும் இன்னமும் ஜாமீன் கிடைக்காமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். அந்த வகையில் ஆம் ஆத்மி கட்சியினா் சம்பந்தப்பட்ட இடங்களில் மேற்கொண்ட சோதனை குறித்து அமலாக்கத் துறையினா் சரியான நேரத்தில் தகவல் அளிப்பா். இதற்கு மேலும் தில்லி மக்களை ஆம் ஆத்மி கட்சியினரால் முட்டாளாக்க முடியாது என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com