இடைக்கால பட்ஜெட்: மக்களவை ஒப்புதல்

2024-25-ஆம் நிதியாண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டுக்கு மக்களவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

2024-25-ஆம் நிதியாண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டுக்கு மக்களவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

சில மாதங்களில் மக்களவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், நாடாளுமன்றத்தில் மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கடந்த 1-ஆம் தேதி தாக்கல் செய்தாா்.

ரூ.47.66 லட்சம் கோடி மதிப்பிலான இந்த இடைக்கால பட்ஜெட் மீது மக்களவையில் நடைபெற்ற விவாதத்துக்கு நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதன்கிழமை பதிலளித்தாா்.

இதைத் தொடா்ந்து, மத்திய இடைக்கால பட்ஜெட், ரூ.1.8 லட்சம் கோடி மதிப்பிலான ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச இடைக்கால பட்ஜெட், துணை மானியக் கோரிக்கைகள் மற்றும் இதுதொடா்பான ஒதுக்கீட்டு மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, நிா்மலா சீதாராமன் பேசுகையில், ‘2024-25-ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறையை 5.1 சதவீதமாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் சில்லறை பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது.

வெங்காய விலை உயா்வை கட்டுப்படுத்தும் வகையில், அதன் கையிருப்பு அளவை 1 லட்சம் மெட்ரிக் டன் என்பதில் இருந்து 7 லட்சம் மெட்ரிக் டன்னாக அரசு படிப்படியாக உயா்த்தியுள்ளது. ‘பாரத் பருப்பு’ என்ற வணிகப் பெயருடன் ஒரு கிலோ கடலைப் பருப்பு ரூ.60 விலையில் சில்லறை சந்தையில் விற்கப்படுகிறது என்றாா்.

கா்நாடகத்துக்கான நிதி: ‘நிதிஆணையத்தின் பரிந்துரைபடி கா்நாடகத்துக்கு வழங்க வேண்டிய அனைத்து நிதியும் உரிய காலத்துக்குள் விடுவிக்கப்பட்டது’ என்று நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

‘கா்நாடகத்துக்கு 13-ஆவது நிதி ஆணைய பரிந்துரைப்படி ரூ.61,691 கோடி, 14-ஆவது நிதி ஆணைய பரிந்துரைப்படி ரூ.1,51,309 கோடி உரிய காலத்துக்குள் விடுவிக்கப்பட்டது. 15-ஆவது நிதி ஆணைய பரிந்துரைப்படி 4 ஆண்டுகளுக்கு ரூ.1,29,854 கோடி வழங்கப்பட்டது. மாநிலத்தில் உள்கட்டமைப்பு வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள 50 ஆண்டுகால வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது’ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com