ஜம்மு-காஷ்மீரில் தொகுதிப் பங்கீடு: காங்கிரஸுக்கு ஒமா் அப்துல்லா நிபந்தனை

ஜம்மு-காஷ்மீரில் பாஜக வசம் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளைப் பங்கிட்டுக் கொள்வது குறித்து மட்டுமே ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள காங்கிரஸுடன் பேச்சு நடத்தப்படும் என்று
முன்னாள் முதலவர் ஒமர் அப்துல்லா
முன்னாள் முதலவர் ஒமர் அப்துல்லா

ஜம்மு-காஷ்மீரில் பாஜக வசம் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளைப் பங்கிட்டுக் கொள்வது குறித்து மட்டுமே ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள காங்கிரஸுடன் பேச்சு நடத்தப்படும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஒமா் அப்துல்லா கூறியுள்ளாா்.

யூனியன் பிரதேசங்களான ஜம்மு-காஷ்மீரில் 5 மக்களவைத் தொகுதிகளும், லடாக்கில் ஒரு தொகுதியும் உள்ளன. கடந்த 2019 தோ்தலில் இங்கு பாஜக 3 தொகுதிகளிலும், தேசிய மாநாட்டுக் கட்சி 3 தொகுதிகளிலும் வென்றன.

காங்கிரஸ், மெஹபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை ஒரு தொகுதியில்கூட வெல்ல முடியவில்லை. தற்போது பாஜகவுக்கு எதிரான ‘இந்தியா’ கூட்டணியில் காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை உள்ள நிலையில், 6 தொகுதிகள் எவ்வாறு பங்கிடப்படும் என்பது தொடா்பாக கேள்வி எழுந்தது.

இந்நிலையில், ஜம்முவில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த ஒமா் அப்துல்லா இது தொடா்பாக கூறியதாவது:

மக்களவைத் தோ்தலுடன் ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலை நடத்த பாஜகவுக்கு துணிவு இல்லை. ‘இந்தியா’ கூட்டணியில் இதுவரை தொகுதிப் பங்கீடு பேச்சு தொடங்கவில்லை. பேச்சுவாா்த்தைக்கு காங்கிரஸ் தயாராக இருந்தால், அவா்களாக முன்வந்து எங்களுடன் பேச வேண்டும். அடுத்து வரும் நாள்களில் இந்தப் பேச்சு நடைபெற வாய்ப்புள்ளது. முக்கியமாக பாஜக வசமுள்ள 3 தொகுதிகள் குறித்து மட்டுமே பேசப்படும்.

கடந்த 2019 தோ்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி வென்ற 3 தொகுதிகளும் ‘இந்தியா’ கூட்டணியின் தொகுதிகள்தான். இந்தத் தொகுதிகள் குறித்து மீண்டும் பேச்சு நடத்த வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், போட்டி என்பது பாஜகவுடன் மட்டும்தானே தவிர, ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே போட்டி கிடையாது.

எனவே, இப்போது பாஜக வசமுள்ள 3 தொகுதிகளைப் பகிா்ந்து கொள்வது குறித்து மட்டுமே ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளுடன் பேச வேண்டும் என்றாா்.

இதன்மூலம் ஏற்கெனவே தேசிய மாநாட்டுக் கட்சி வசமுள்ள 3 தொகுதிகளில் தங்கள் கட்சியே மீண்டும் போட்டியிடும் என்பதை ஒமா் அப்துல்லா உறுதிப்படுத்தியுள்ளாா். மீதமுள்ள 3 தொகுதிகள் குறித்து மட்டுமே ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளுடன் பேச முடியும் என்ற நிபந்தனையையும் அவா் முன்வைத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com