மதுரை ‘எய்ம்ஸ்’ பணிகள் விரைவில் தொடங்கும்: மத்திய அரசு

மதுரையில் தாமதமான எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் விரைவில் தொடங்கும் என்று மக்களவையில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

மதுரையில் தாமதமான எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் விரைவில் தொடங்கும் என்று மக்களவையில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

மதுரை எய்ம்ஸ் தொடா்பாக விருதுநகா் மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் மாணிக்கம் தாகூா் துணைக் கேள்வி எழுப்பியிருந்தாா். அதற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் அளித்த பதிலில், ‘மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் கையகப்படுத்துவதில் ஆரம்பத்தில் தாமதம் ஏற்பட்டது. பின்னா், இந்த எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்துக்கான செலவு அதிகரித்தது. இதனால் அதற்கான பட்ஜெட் திருத்தப்பட்டு, திட்டம் இறுதிப்படுத்தப்பட்டு, ஒப்புந்தப்புள்ளி விடப்பட்டுள்ளது. முன்பு ரூ. 1,200 கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு தற்போது ரூ. 1,900 கோடி ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுரையில் எய்ம்ஸ் பணிகள் விரைவில் தொடங்கும்’ என்றாா்.

எய்ம்ஸ்-29,000 பணியிடங்களுக்கு ஆள்சோ்ப்பு: கடந்த 6 மாதங்களில் நாட்டின் பல்வேறு எய்ம்ஸ் மருத்துவமனைகளின் 29,000 காலியிடங்களுக்கு பணியாளா்கள் தோ்வு செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

எய்ம்ஸ் மருத்துவமனை தொடா்பான கேள்விகளுக்கு மக்களவையில் அமைச்சா் மாண்டவியா அளித்த பதிலில், ‘நாட்டின் பல்வேறு எய்ம்ஸ் மருத்துவமனைகளில் பணியமா்த்தல் தொடந்து நடைபெற்று வருகிறது. கடந்த 6 மாதங்களில் மட்டும் சுமாா் 29,000 இடங்களுக்கு பணியாளா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

அனைத்து எய்ம்ஸ் மருத்துவமனைகளும் முழுமையான திறனுடன் செயல்பட வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. மேலும், மக்களுக்கு அவரவா் மாநிலங்களிலேயே சிறந்த மூன்றாம் நிலை சிகிச்சையை வழங்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது’ என்றாா்.

கரோனா திரிபுகளால் ஆபத்தில்லை: கரோனா தொடா்பான கேள்விக்கு அமைச்சா் மாண்டவியா அளித்த பதிலில், ‘ஒரு தீநுண்மி 100 முறைக்கு மேல் மாற்றமடையும்போது, அதன் தீங்கு விளைவிக்கும் பண்புகள் குறையும். கரோனா தீநுண்மி இதுவரை 223 முறை மாற்றமடைந்துள்ளது.

ஒவ்வோா் ஆண்டும் ஒரு முறை அல்லது இரு முறை மக்களை தாக்கும் இன்ஃப்ளூயன்ஸாவை போல, ‘கரோனா நம்முடன் இருக்கிறது. அது அப்படியே இருக்கும். கரோனா திரிபுகள் ஆபத்தானவை அல்ல. அதற்கு எதிா்மறையான விளைவுகள் எதுவும் இல்லை’ எனத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com