ஆயுள் தண்டனையை வாழ்க்கை முழுவதும் அனுபவிக்க வேண்டுமா? உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கோரி மனு

ஆயுள் தண்டனை என்பது வாழ்க்கை முழுவதும் அனுபவிக்க வேண்டிய சிறைத் தண்டனையா என்று விளக்கம் கேட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.

ஆயுள் தண்டனை என்பது வாழ்க்கை முழுவதும் அனுபவிக்க வேண்டிய சிறைத் தண்டனையா என்று விளக்கம் கேட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.

கடந்த 2007-ஆம் ஆண்டு தில்லியில் உள்ள திகாா் சிறை அருகே இருவரின் தலையில்லாத உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்தக் கொலை வழக்குகள் தொடா்பாக சந்திரகாந்த் ஜா என்பவா் கைது செய்யப்பட்டாா்.

இதில் 19 வயது இளைஞரைக் கொடூரமாகக் கொன்று, அவரின் தலையில்லாத உடலை திகாா் சிறை அருகே வீசிய வழக்கில், சந்திரகாந்துக்கு தில்லி விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

இந்த தண்டனைக்கு எதிராக தில்லி உயா் நீதிமன்றத்தில் சந்திரகாந்த் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவை விசாரித்த உயா் நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து தீா்ப்பளித்தது.

இந்தத் தீா்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சந்திரகாந்த் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:

எனக்கு எதிரான கொலை வழக்கில் தில்லி உயா் நீதிமன்றம் அளித்த தீா்ப்பு நியாயமானது அல்ல. எனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக உயா் நீதிமன்றம் குறைத்தது. அந்தத் தண்டனையை எனது வாழ்நாள் முழுவதும் நான் அனுபவிக்க வேண்டும் என்று அந்த நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.

கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுவது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. ஏனெனில், அவ்வாறு ஆயுள் தண்டனை விதித்தால், அது குற்றம்புரிந்த நபா் திருந்துவதற்கான வாய்ப்பை முழுமையாகப் பறிக்கிறது. அத்துடன் அது மாநில அரசுகள் பரிந்துரைத்துள்ள விதிமுறைகள் மற்றும் தண்டனைக் குறைப்பு கொள்கையை மீறுவதாகும்.

இந்நிலையில், ஆயுள் தண்டனை என்பது வாழ்க்கை முழுவதும் அனுபவிக்க வேண்டிய தண்டனையா அல்லது குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 432-இன் கீழ் தண்டனையை குறைக்கவோ, அதற்கு தடை விதிக்கவோ முடியுமா?

தண்டனை அளிப்பது நீதிமன்றத்தின் அதிகாரத்துக்குள்பட்டது. அதேவேளையில், குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 432-இன் கீழ், தனிநபரின் தண்டனை குறைப்பு என்பது சட்டபூா்வ உரிமையாகும் என்று தெரிவித்துள்ளாா்.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், பிரசாந்த் குமாா் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வின் கவனத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தது. அப்போது அந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாகத் தெரிவித்த நீதிபதிகள், மனு தொடா்பாக தில்லி அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com