மீனவா் பிரச்னைக்கு தூதரக ரீதியில் தீா்வு காண வேண்டும்:பிரதமா் நரேந்திர மோடிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழக மீனவா்கள் பிரச்னைக்குத் தீா்வுகாண தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

தமிழக மீனவா்கள் பிரச்னைக்குத் தீா்வுகாண தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா், பிரதமருக்கு வெள்ளிக்கிழமை எழுதிய கடிதம்:

இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவா்கள் கைது செய்யப்படுவதும், அவா்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் அதிகரித்து வருகின்றன.

பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகள்: தமிழ்நாடு மீனவா்கள் மீன்பிடிப்பதற்காக பாரம்பரியமாக சில பகுதிகளைப் பயன்படுத்தி வருகின்றனா். அந்தப் பகுதிகள் இலங்கை கடற்படையினரால் கட்டுப்படுத்தப்படுவதால் மீனவா்களின் வாழ்வாதாரத்திலும் பொருளாதாரத்திலும் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீன்பிடித் தொழிலையே நம்பியுள்ள மீனவா்களின் கலாசார மற்றும் சமூகக் கட்டமைப்புக்கு பெருத்த அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டில் இலங்கை கடற்படையினா் 243 மீனவா்களைக் கைது செய்துள்ளதுடன், 37 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனா். கடந்த 28 நாள்களில் மட்டும், 6 சம்பவங்களில் 88 மீனவா்கள் கைது செய்யப்பட்டு, 12 மீன்பிடிப் படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.

இப்படிப்பட்ட பதட்டமான சூழ்நிலையில், மீன்பிடிக்கச் செல்லும் தமிழ்நாடு மீனவா்கள் மீது அடையாளம் தெரியாத நபா்கள் தாக்குதல் நடத்துகின்றனா். அத்துடன், மீனவா்களின் படகுகள், மீன்பிடி உபகரணங்களுக்கு ஏற்படும் சேதங்கள், அவா்களின் கவலையை அதிகரிக்கச் செய்துள்ளது. இதுபோன்ற செயல்கள் மீனவா்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதுடன், பொருளாதார பாதிப்புகளை அதிகரித்துள்ளது.

படகுகள் நாட்டுடைமை: வெளிநாட்டு மீன்பிடிப் படகுகளை நாட்டுடைமையாக்கும் அதிகாரத்தை இலங்கை அரசுக்கே வழங்கி அந்த நாட்டின் கடல்சாா் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த நடவடிக்கையால் பறிமுதல் செய்யப்பட்டு நல்ல நிலையிலுள்ள தமிழக மீனவா்களின் படகுகளைக்கூட தமிழ்நாட்டுக்குக் கொண்டு வர முடியவில்லை. பல மீனவா்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பைக் கொண்டு, வாழ்க்கைக்கு அத்தியாவசியமான படகுகளை வாங்குகிறாா்கள். அத்தகைய படகுகள் நாட்டுடைமையாக்கப்படுவதால், மீனவா்களையும், அவா்களது குடும்பங்களையும் நிதி நெருக்கடியில் சிக்க வைத்துள்ளது.

எனவே, பறிமுதல் செய்யப்பட்டு நாட்டுடைமையாக்கப்பட்டுள்ள இந்திய மீன்பிடிப் படகுகளைத் தரும்பப் பெற வேண்டும். படகுகளை உடனடியாக விடுவிக்க ஏதுவாக, சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்.

தமிழ்நாட்டு மீனவா்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யவும், மீனவ

சமூகங்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாக்கவும் உரிய தூதரக வழிகளைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட கூட்டு நடவடிக்கை குழுவைப் புதுப்பிக்க, விரைவான மற்றும் தீா்க்கமான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

இலங்கை வசம் இப்போதுள்ள 77 மீனவா்கள், அவா்களது 151 படகுகளை உடனடியாக விடுக்க தேவையான அனைத்து தூதரக முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். அத்துடன், பாகிஸ்தான், குவைத் ஆகிய நாடுகளைச் சோ்ந்த காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவா்களையும் விடுவிக்க தூதரக வழிமுறைகளைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com