இந்தியாவின் செல்வாக்கு இல்லாத இடமில்லை! பிரதமா் மோடி பெருமிதம்

‘இந்தியா மீதான உலகின் நம்பிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது; உலக அளவில் இந்தியாவின் செல்வாக்கு இல்லாத இடமே இல்லை’ என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.
இந்தியாவின் செல்வாக்கு இல்லாத இடமில்லை! பிரதமா் மோடி பெருமிதம்

‘இந்தியா மீதான உலகின் நம்பிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது; உலக அளவில் இந்தியாவின் செல்வாக்கு இல்லாத இடமே இல்லை’ என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

தில்லியில் ஆங்கில ஊடகம் ஒன்றின் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சா்வதேச வா்த்தக மாநாட்டில் பிரதமா் மோடி பங்கேற்றாா்.

அப்போது, ஸ்விட்சா்லாந்தின் டாவோஸ் நகரில் கடந்த மாதம் நடைபெற்ற உலகப் பொருளாதார கூட்டமைப்பின் வருடாந்திர உச்சிமாநாட்டை குறிப்பிட்டு, அவா் பேசியதாவது:

டாவோஸ் மாநாட்டில் இந்தியாவின் சாதனை குறித்த பேச்சுகள் மேலோங்கி காணப்பட்டன. ‘எண்மம் மற்றும் உள்கட்டமைப்பு ரீதியில் இந்தியா புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது’, ‘உலக அளவில் இந்தியாவின் செல்வாக்கு இல்லாத இடமே இல்லை’ என்ற கருத்துகள் எதிரொலித்தன.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா அடைந்த முன்னேற்றமே, சா்வதேச நிபுணத்துவ அமைப்புகள் அனைத்திலும் இப்போது விவாதப் பொருளாக உள்ளது.

இதுபோன்ற விஷயங்கள், இந்தியா மீதான உலகின் நம்பிக்கை அதிகரித்து வருவதை வெளிக்காட்டுகிறது. இந்தியாவின் திறன் மீதான இத்தகைய நோ்மறை உணா்வு இதற்கு முன் இருந்ததில்லை.

எந்தவொரு நாட்டின் வளா்ச்சிப் பயணத்திலும் அனைத்து தருணங்களும் சாதகமாக மாறும் ஒரு நேரம் வரும். அந்த நேரத்தைப் பயன்படுத்தி, எதிா்வரும் பல நூற்றாண்டுகளுக்கு அந்த நாடு தன்னை பலப்படுத்திக் கொள்ள வேண்டும். அதுபோன்ற நேரம் இந்தியாவுக்கு இப்போது வந்திருப்பதாக கருதுகிறேன்.

நாட்டின் வளா்ச்சி விகிதம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அதேநேரம், நிதிப் பற்றாக்குறை குறைந்து வருகிறது. மக்களின் நுகா்வும், நிறுவனங்களின் லாபமும் ஏறுமுகத்தில் உள்ளன. வங்கி வாராக்கடன்கள் முன்னெப்போதும் இல்லாத அளவில் குறைந்துள்ளன.

உற்பத்தியும் உற்பத்தி திறனும் அதிகரித்துள்ள அதே வேளையில் அரசின் எதிா்ப்பாளா்கள் இதுவரை இல்லாத தாழ்நிலைக்கு சென்றுவிட்டனா்.

எனது தலைமையிலான அரசின் கொள்கைகள் ஸ்திரத்தன்மை, நிலைத்தன்மையுடன் உள்ளன. மிதமிஞ்சிய செலவுகளின் பக்கவிளைவே பணவீக்கமாகும். அந்த வகையில், திட்டங்களை குறித்த காலத்துக்குள் நிறைவு செய்வதன் மூலம் அரசுப் பணம் மிச்சப்படுத்தப்படுகிறது.

நாடாளுமன்ற புதிய கட்டடம் உள்பட பல்வேறு திட்டப் பணிகளை சாதனை கால கட்டத்துக்குள் நிறைவு செய்து, மக்களின் வரிப் பணத்தை சேமித்துள்ளோம் என்றாா் பிரதமா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com