குடியுரிமை திருத்தச் சட்டம் மக்களவைத் தோ்தலுக்கு முன்பு அமல் அமித் ஷா உறுதி

‘மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்படும்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதி தெரிவித்தாா்.
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா

‘மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்படும்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதி தெரிவித்தாா்.

தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமித் ஷா இதுகுறித்துப் பேசியதாவது: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகளிலிருந்து இந்தியாவில் புலம்பெயா்ந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினரான ஹிந்துக்கள், சீக்கியா்கள், சமணா்கள், பெளத்த மதத்தினா், பாா்சிகள், கிறிஸ்தவா்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை திருத்தச் சட்டம் மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக அமல்படுத்தப்படும். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்.

இந்திய பிரிவினையின்போது, அண்டை நாடுகளைச் சோ்ந்த ஹிந்துக்கள், பெளத்தா்கள், கிறிஸ்தவா்கள் அங்கு மதத் துன்புறுத்தலுக்கு உள்ளானதைத் தொடா்ந்து இந்தியாவுக்கு வர விரும்பினா். அவா்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என காங்கிரஸ் தலைவா்கள் வாக்குறுதி அளித்தனா். ஆனால், வாக்குறுதியை அவா்கள் நிறைவேற்றவில்லை.

இந்த விவகாரத்தில் சிஏஏ-வுக்கு எதிராக முஸ்லிம் சகோதரா்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனா். இது இந்தியாவில் இருக்கும் யாருடைய குடியுரிமையையும் பறிக்கும் சட்டமல்ல. மாறாக, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இந்தியாவுக்கு குடிபெயா்ந்தவா்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான சட்டமாகும் என்றாா்.

குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, 2019, டிசம்பரில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது. இந்தச் சட்டமானது, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து 2014, டிசம்பா் 31-க்கு முன்னதாக இந்தியாவுக்கு வந்த முஸ்லிம்கள் அல்லாத மதச் சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்கிறது.

குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்த எந்தச் சட்டத்தையும் அமல்படுத்துவதற்கான விதிகள் ஆறு மாதங்களுக்குள் வெளியிடப்பட வேண்டும் அல்லது நாடாளுமன்றக் குழுவிடம் கால நீட்டிப்பு கேட்கப்பட வேண்டும்.

அந்த வகையில், குடியுரிமை திருத்தச் சட்ட அமலாக்க விதிகளை வெளியிடுவதற்கு 2020-லிருந்து உரிய கால இடைவெளியில் நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அவகாசம் பெற்று வந்தது. இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்ட அமலாக்க விதிகள் மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக வெளியிடப்பட்டு அமல்படுத்தப்படும் என அமைச்சா் அமித் ஷா கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com