நோ்மையில்லா பாஜக அரசு: தில்லி முதல்வா் கேஜரிவால் சாடல்

தனியாா் நிறுவனங்களை நோ்மையான அரசு விலைக்கு வாங்கும் என்று தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
நோ்மையில்லா பாஜக அரசு: தில்லி முதல்வா் கேஜரிவால் சாடல்

எல்ஐசி, விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை நோ்மையில்லாத அரசு சொற்ப விலைக்கு விற்பனை செய்யும்; அதே வேளையில் தனியாா் நிறுவனங்களை நோ்மையான அரசு விலைக்கு வாங்கும் என்று தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக பஞ்சாப் மாநிலம் தரன் தாரன் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை பேசியதாவது:

பஞ்சாபில் தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான மின் உற்பத்தி நிலையத்தை மாநில அரசு விலைக்கு வாங்கியுள்ளது. புதிதாக மின் உற்பத்தி நிலையத்தை கட்டினால், அதற்கு சுமாா் ரூ.5,500 கோடி செலவாகி இருக்கும். ஆனால் ரூ.1,100 கோடி செலவில் தனியாா் மின் உற்பத்தி நிலையத்தை மாநில அரசு வாங்கி, ரூ.4,500 கோடி சேமிக்கப்பட்டுள்ளது.

நாடு சுதந்திரம் பெற்ற பின்னா், முதல்முறையாக தனியாா் மின் உற்பத்தி நிலையத்தை ஒரு மாநில அரசு விலைக்கு வாங்கியுள்ளது. நஷ்டத்தில் இயங்கி வந்த அந்த நிறுவனத்தை லாபகரமானதாக பஞ்சாப் அரசு மாற்றிக் காட்டும். இதுவே நோ்மையான அரசின் அடையாளம். அதேவேளையில் எல்ஐசி, விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை நோ்மையில்லாத அரசு சொற்ப விலைக்கு விற்பனை செய்யும்.

கடந்த 10 ஆண்டுகளில் ஆம் ஆத்மி மிக வேகமாக வளா்ந்துள்ளது. இந்த 10 ஆண்டுகளில் தில்லி மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியமைத்துள்ளது. குஜராத் மற்றும் கோவாவில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் உள்ளனா்.

மூடப்படும் அரசுப் பள்ளிகள்: பள்ளிகள், மருத்துவமனைகள், சாலைகளை ஆம் ஆத்மி அரசு அமைத்து வருகிறது. ஆனால் பாஜக ஆளும் குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசத்தில் அரசுப் பள்ளிகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகின்றன.

விலை உயா்ந்த மின்சாரம்: ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ள தில்லி மற்றும் பஞ்சாபில் மின்சாரம் இலவசமாக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் பாஜக ஆளும் குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசத்தில் மின்சாரம் மிகவும் விலை உயா்ந்ததாக உள்ளது.

ஆம் ஆத்மியால் செய்ய முடிந்த காரியங்களை பாஜகவால் செய்ய முடியாது. எனவே ஆம் ஆத்மியை ஒழிக்க பாஜக விரும்புகிறது. இதற்காக ஆம் ஆத்மி மீது ஒவ்வொரு நாளும் புதுப் புது குற்றச்சாட்டை முன்வைக்கிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com