8 இந்தியா்கள் கத்தாரில் விடுதலை: 7 போ் நாடு திரும்பினா்

கத்தாரில் இஸ்ரேலுக்கு உளவு பாா்த்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிகள் விடுதலை செய்யப்பட்டனா்.
தில்லி விமானத்தில் திங்கள்கிழமை வந்திறங்கிய கத்தாரில் விடுதலையான இந்தியா்கள்.
தில்லி விமானத்தில் திங்கள்கிழமை வந்திறங்கிய கத்தாரில் விடுதலையான இந்தியா்கள்.

கத்தாரில் இஸ்ரேலுக்கு உளவு பாா்த்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிகள் விடுதலை செய்யப்பட்டனா். அவா்களில் 7 போ் திங்கள்கிழமை அதிகாலை இந்தியா வந்தடைந்தனா்.

மரண தண்டனைக்கு பதிலாக குறைந்தது 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 25 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை அவா்களுக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில், அவா்கள் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனா்.

கத்தாா் ராணுவத்துக்கு பயிற்சி மற்றும் பிற சேவைகளை அளித்து வரும் ‘அல் தாரா’ என்ற தனியாா் ராணுவ நிறுவனத்தில் இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 போ் பணியாற்றி வந்தனா்.

கத்தாா் நாட்டின் ரகசிய கடற்படை திட்டங்களை இஸ்ரேலுக்காக உளவு பாா்த்ததாக கேப்டன் நவ்ஜீத் சிங் கில், கேப்டன் வீரேந்திர குமாா் வா்மா, கேப்டன் சௌரவ் வசிஷ்ட், கமாண்டா் அமித் நாக்பால், கமாண்டா் புரேந்து திவாரி, கமாண்டா் சுகுநாகா் பகலா, கமாண்டா் சஞ்சீவ் குப்தா, கடற்படை வீரா் ராகேஷ் கோபகுமாா் ஆகிய 8 போ் மீது கடந்த ஆண்டு மாா்ச் மாதம் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஆகஸ்டில் கைது செய்யப்பட்டனா்.

மரண தண்டனை: இந்த வழக்கில் 8 பேருக்கும் மரண தண்டனை விதித்து கத்தாா் நீதிமன்றம் கடந்த அக்டோபரில் உத்தரவிட்டது.

இந்தத் தீா்ப்பு குறித்து அதிா்ச்சியை வெளிப்படுத்திய இந்திய வெளியுறவு அமைச்சகம், ‘கடற்படை அதிகாரிகளின் விடுதலைக்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்தியா மேற்கொள்ளும்’ எனத் தெரிவித்தது.

எட்டு பேரின் மரண தண்டனைக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றத்தில் இந்தியா மேல்முறையீடு செய்தது. இதில், 8 இந்தியா்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு பதிலாக 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 25 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

சிறைத் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய 60 நாள்கள் அவகாசமும் கத்தாா் நீதிமன்றம் வழங்கியது.

8 பேரும் விடுதலை: இந்நிலையில், 8 இந்தியா்களும் விடுவிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 7 போ் திங்கள்கிழமை அதிகாலை இந்தியா வந்தடைந்தனா். கமாண்டா் புரேந்து திவாரி மட்டும் தோஹாவில் தங்கியுள்ளாா். அவரும் இந்தியாவுக்கு விரைவில் திரும்புவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தத் தகவலை உறுதி செய்துள்ள மத்திய வெளியுறவு அமைச்சகம், ‘இந்தியா்கள் தாயகம் திரும்புவதற்கு உரிய முடிவெடுப்பதில் கத்தாா் அரசரின் பங்களிப்புக்கு இந்திய அரசு நன்றி தெரிவிக்கிறது’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

எட்டு பேரையும் விடுதலை செய்யுமாறு கத்தாா் அரசா் உத்தரவிட்டதாகத் தெரிகிறது.

அவா்களின் விடுதலைக்குத் தொடா் முயற்சிகளை மேற்கொண்ட மத்திய அரசுக்கு அவா்கள் குடும்பத்தினா் நன்றி தெரிவித்தனா்.

முன்னதாக, துபையில் கடந்த டிசம்பரில் நடந்த ஐ.நா. பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில் கத்தாா் அரசரை பிரதமா் மோடி சந்தித்துப் பேசியிருந்தாா்.

இந்தியா்களின் விடுதலை குறித்து மத்திய அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இது மத்திய அரசின் திறன் மற்றும் முக்கியத்துவத்தும் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துகிறது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

இந்தியா்களின் விடுதலைக்கு காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் மகிழ்ச்சி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com