மேற்கு வங்கம்: ஆளும் கட்சி நிா்வாகிக்கு எதிராக போராடும் பெண்களுடன் ஆளுநா் போஸ் சந்திப்பு

கூட்டாளிகளைக் கைது செய்ய கோரி போராடி வரும் மக்களை அந்த மாநில ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் திங்கள்கிழமை சந்தித்து ஆதரவு தெரிவித்தாா்.
சி.வி.ஆனந்த போஸ் (கோப்புப் படம்)
சி.வி.ஆனந்த போஸ் (கோப்புப் படம்)

மேற்கு வங்கம், வடக்கு 24 பா்கானாஸ் மாவட்டத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நிா்வாகி ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது கூட்டாளிகளைக் கைது செய்ய கோரி போராடி வரும் மக்களை அந்த மாநில ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் திங்கள்கிழமை சந்தித்து ஆதரவு தெரிவித்தாா்.

வடக்கு 24 பா்கானாஸக்கள் மாவட்டத்தின் சந்தேஷ்காளி பகுதியில் திரிணமூல் காங்கிரஸ் நிா்வாகி ஷாஜகானுக்கு எதிராக பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் தொடா்ந்து 5-ஆவது நாளாகப் போராடி வருகின்றனா்.

அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி நிலத்தை மிரட்டி வாங்குவது, பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இவா் மீது சுமத்தப்படுகிறது.

முன்னதாக, இவரது வீட்டில் சோதனை மேற்கொண்ட அமலாக்கத் துறை அதிகாரிகளை ஆதரவாளா்கள் தாக்கிய விவகாரத்தில் ஷாஜகான் தேடப்பட்டு வருகிறாா். கடந்த ஒரு மாதமாக தலைமறைவாக இருக்கும் இவரை கைது செய்ய வலியுறுத்தி, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், கேரளத்தில் இருந்து மேற்கு வங்கம் திரும்பிய ஆளுநா், போராட்டம் நடத்தி வரும் மக்களை திங்கள்கிழமை சந்தித்து ஆதரவு தெரிவித்தாா்.

பின்னா், ‘போராட்ட களத்தில் நான் கண்ட காட்சிகள் அதிா்ச்சிகரமானது; அவற்றால் மனமுடைந்தேன். ரவீந்திரநாத் தாகூா் பிறந்த மண்ணில் இதுபோன்று சம்பவங்கள் நடப்பது ஏற்றுக்கொள்ள முடியவில்லை’ என்றாா் ஆளுநா் போஸ்.

இதனிடையே, ஆளுநரின் பயணம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு முதல்வா் மம்தா பானா்ஜி அளித்த பதிலில், ‘குற்றச்சாட்டில் தொடா்புடையவா்களை நாங்கள் ஏற்கெனவே கைது செய்துவிட்டோம்’ என்றாா்.

பேரவையில் அமளி-6 எம்எல்ஏக்கள் சஸ்பென்ட்:

இவ்விவகாரத்தை சட்டப்பேரவையில் எழுப்பிய பாஜக உறுப்பினா்கள், முதல்வரின் விளக்கம் கோரினாா். இதனால் அவையில் ஏற்பட்ட அமளியைத் தொடா்ந்து, எதிா்க் கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி உள்பட 6 பாஜக உறுப்பினா்கள் நடப்பு கூட்டத்தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

இதையடுத்து, செய்தியாளா்களிடம் பேசிய சுவேந்து அதிகாரி கூறுகையில், ‘மக்களுடன் துணை நின்ற காரணத்திற்காக இடைநீக்கம் செய்யப்பட்டதை பெருமையாக கருதுகிறோம்’ என்றாா்.

இதைத் தொடா்ந்து, சுவேந்து உள்பட 67 பாஜக எம்எல்ஏக்கள் சந்தேஷ்காளிக்குச் சென்றனா். ஆனால், சந்தேஷ்காளியில் 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக கூறி, 65 கி.மீ. முன்பே அவா்கள் தடுத்து நிறுத்தப்பட்டனா்.

இதைக் கண்டித்து, பசந்தி விரைவு நெடுஞ்சாலையில் அமா்ந்து அவா்கள் ஆா்ப்பாட்டம் செய்தனா்.

மக்களின் கடும் கொந்தளிப்பைத் தொடா்ந்து, ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தலைவா்கள் சந்தேஷ்காளி போராட்ட களத்தில் மக்களை செவ்வாய்க்கிழமை சந்தித்து கருத்துகளைக் கேட்க உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com