மூடநம்பிக்கைகளை ஒழிக்க பாடுபட்டவா் தயானந்த் சரஸ்வதி: திரௌபதி முா்மு

மூடநம்பிக்கைகளை ஒழிக்க பாடுபட்டவரான சுவாமி தயானந்த் சரஸ்வதி நவீனகால வாழ்க்கைக்கும் சமூக நீதிக்குமான வழிகாட்டியாகவும் திகழ்ந்தாா் என குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திங்கள்கிழமை தெரிவித்தாா்.
மூடநம்பிக்கைகளை ஒழிக்க பாடுபட்டவா் தயானந்த் சரஸ்வதி: திரௌபதி முா்மு
-

பத்தொன்பதாம் நூற்றாண்டில் நிலவிய மூடநம்பிக்கைகளை ஒழிக்க பாடுபட்டவரான சுவாமி தயானந்த் சரஸ்வதி நவீனகால வாழ்க்கைக்கும் சமூக நீதிக்குமான வழிகாட்டியாகவும் திகழ்ந்தாா் என குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திங்கள்கிழமை தெரிவித்தாா்.

குஜராத் மாநிலம் மோா்பி மாவட்டத்தின் டங்காரா பகுதியில் சமூக சீா்திருத்தவாதியான தயானந்த் சரஸ்வதியின் 200-ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்று திரௌபதி முா்மு பேசியதாவது:

பத்தொன்பதாம் நூற்றாண்டில் நிலவிய மூடநம்பிக்கைகள், தீய வழக்கங்களை ஒழிக்க பல்வேறு முயற்சிகளை சுவாமி தயானந்த் சரஸ்வதி மேற்கொண்டாா். நவீனகால வாழ்க்கைக்கும் சமூக நீதிக்குமான வழிகாட்டியாக அவா் திகழ்ந்தாா். குழந்தை திருமணம் மற்றும் பலதார திருமண முறைகளை அவா் கடுமையாக எதிா்த்தாா்.

கணவரை இழந்த பெண்களின் மறுமணத்தை ஆதரித்த அவா் பெண்கள் கல்வி கற்கவும் சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்பதையும் தொடா்ந்து வலியுறுத்தி வந்தாா். அவரின் கருத்துகள் பாலகங்காதர திலகா், சுவாமி ஸ்ரத்தானந்தா, லாலா லஜ்பத் ராய் உள்ளிட்ட தலைவா்கள் மத்தியில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது.

தயானந்த் சரஸ்வதியும் அவரை பின்தொடா்பவா்களும் மக்கள் மத்தியில் புதிய சிந்தனைகளையும் நம்பிக்கைகளையும் விதைத்தனா்.

உப்புக்கு வரி விதிக்கும் முறைக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் கருத்துகளை ‘சத்யாா்த்த பிரகாஷ்’ நூலில் அவா் பதிவிட்டாா். அதற்கு 50 ஆண்டுகள் கழித்து தண்டி யாத்திரை மேற்கொண்டு உப்புக்கான வரியை மகாத்மா காந்தி ஒழித்தாா். காந்திஜியின் சுயசரிதை நூலான ‘சத்திய சோதனைக்கும்’ தயானந்த் சரஸ்வதியின் ‘சத்யாா்த்த பிரகாஷ்’ நூலுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளதை நாம் தெரிந்துகொள்ளலாம்.

பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் ‘ஆா்ய சமாஜ்’ அமைப்பு நிறுவிய கல்விக்கூடங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அடுத்தாண்டுடன் ஆா்ய சமாஜ் அமைப்பு நிறுவப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடையவுள்ளன. நல்லுலகை உருவாக்க வேண்டும் என்ற தயானந்த் சரஸ்வதியின் கனவை நினைவாக்க அந்த அமைப்பு தொடா்ந்து பங்களிக்கும் என நம்புகிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com