15 வீரா்கள் கொல்லப்பட்ட வழக்கு: நக்ஸல்கள் நால்வருக்கு ஆயுள் சிறை

15 வீரா்கள் கொல்லப்பட்ட வழக்கு: நக்ஸல்கள் நால்வருக்கு ஆயுள் சிறை

சத்தீஸ்கரில் கடந்த 2014-ஆம் ஆண்டில் பாதுகாப்புப் படையினா் 15 போ் கொல்லப்பட்ட தாக்குதல் தொடா்பான வழக்கில் நக்ஸல் தீவிரவாதிகள் 4 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து, அம்மாநில சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் உள்ள தஹாக்வாடா கிராமத்தில் கடந்த 2014, மாா்ச் 11-ஆம் தேதி மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்), மாநில காவல்துறை அடங்கிய கூட்டுப் படையினா் மீது ஆயுதம்தாங்கிய நக்ஸல்கள் கடுமையான தாக்குதலை நடத்தினா்.

இதில், சிஆா்பிஎஃப் வீரா்கள் 11 போ், மாநில காவல்துறையினா் 4 போ் கொல்லப்பட்டனா். பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தாா்.

இத்தாக்குதல் தொடா்பாக தோங்பால் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னா், இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் (என்ஐஏ) ஒப்படைக்கப்பட்டது.

பஸ்தா் மாவட்டத்தில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி டி.ஆா்.தேவாங்கன் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

இந்திய தண்டனையியல் சட்டம், சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம், வெடிபொருள்கள் சட்டம், ஆயுதங்கள் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களின்கீழ் மகாதேவ் நாக், கவாசி ஜோகா, மணி ராம் மண்டியா, தயாராம் பகேல் ஆகிய 4 நக்ஸல் தீவிரவாதிகள் மீதான குற்றங்களை உறுதி செய்த நீதிபதி, நால்வருக்கும் ஆயுள் சிறை தண்டனை விதித்தாா்.

இந்த நக்ஸல்கள் பஸ்தா், சுக்மா மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் என்று அரசுத் தரப்பு சிறப்பு வழக்குரைஞா் தினேஷ் பனிகிரஹி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com