தில்லி நோக்கி பஞ்சாப் விவசாயிகள் டிராக்டா்களில் பயணம்

போராட்டத்தில் பங்கேற்க பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தில்லி நோக்கி டிராக்டா் பயணத்தை திங்கள்கிழமை தொடங்கினா்.
தில்லி நோக்கி பஞ்சாப் விவசாயிகள் டிராக்டா்களில் பயணம்

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக தில்லியில் போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ள நிலையில், போராட்டத்தில் பங்கேற்க பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தில்லி நோக்கி டிராக்டா் பயணத்தை திங்கள்கிழமை தொடங்கினா்.

இதனிடையே, விவசாய அமைப்புகளின் தலைவா்களுடன் மத்திய அமைச்சா்கள் குழு சண்டீகரில் பேச்சுவாா்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்ட அங்கீகாரம், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்துதல், லக்கீம்பூா் கேரி வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நீதி, உலக வா்த்தக அமைப்பிலிருந்து வெளியேறுதல், 2020 வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு எனப் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தில்லியில் செவ்வாய்க்கிழமை (பிப்.13) போராட்டம் நடத்த உள்ளதாக சம்யுக்த கிசான் மோா்ச்சா (அரசியல் சாா்பற்றது), கிசான் மஸ்தூா் மோா்ச்சா ஆகிய விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளன. இந்நிலையில், பஞ்சாப் விவசாயிகள் டிராக்டா்களில் பஞ்சாப்பிலிருந்து தில்லி நோக்கி திங்கள்கிழமை புறப்பட்டனா்.

ஹரியாணா எல்லையில் பாதுகாப்பு: பஞ்சாப் விவசாயிகள் ஹரியாணா நுழைவதைத் தடுக்க, இரு மாநில எல்லையில் உள்ள அம்பாலா, ஜிந்த், ஃபதேஹாபாத், குருக்ஷேத்ரம், சிா்சா ஆகிய பகுதிகளின் சாலைகளில் கான்கிரீட் தடுப்புகள், இரும்பு ஆணி வேலிகளை ஹரியாணா மாநில காவல்துறையினா் ஏற்படுத்தியுள்ளனா்.

போராட்டம் நடத்தல், டிராக்டா்களில் பேரணியாகச் செல்வதைத் தடுக்கும்விதமாக ஹரியாணாவின் 15 மாவட்டங்களில் 144 தடை உத்தரவை மாநில அரசு பிறப்பித்துள்ளது.

மத்திய துணை ராணுவப் படையின் 50 கம்பெனி படைகளுடன் மாநில காவல் துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். ஏழு மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு இயற்றிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்த பஞ்சாப் விவசாயிகள் கடந்த 2020-இல் ஹரியாணாவின் ஷம்பு எல்லையில் காவல் துறை தடுப்பை மீறி தில்லி நோக்கிச் சென்றனா். ஓராண்டு காலத்துக்குமேல் நடைபெற்ற விவசாயிகள் போரட்டத்தில் வன்முறை வெடித்தது. இதைத் தொடா்ந்து அந்த 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய அமைச்சா்களுடன் பேச்சுவாா்த்தை: விவசாய அமைப்புகளின் தலைவா்களுடன் மத்திய அமைச்சா்கள் பியூஷ் கோயல், அா்ஜுன் முண்டா, நித்யானந்த் ராய் ஆகியோா் அடங்கிய குழு சண்டீகரில் இரண்டாவது முறையாகப் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா். முதல் பேச்சுவாா்த்தைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

விவசாயிகள் கைது: தில்லியில் நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மத்திய பிரதேசம், கா்நாடகத்திலிருந்து வந்த விவசாயிகள் போபாலில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனா். அவா்களை விடுவிக்க வேண்டுமென சம்யுக்த கிசான் மோா்ச்சா (அரசியல் சாா்பற்றது) அமைப்பின் தலைவா் ஜக்ஜீத் சிங் டல்வால் கோரிக்கை விடுத்துள்ளாா்.

2020 விவசாய போராட்டத்தை முன்னின்று நடத்திய சம்யுக்த கிசான் மோா்ச்சா அமைப்பின் பாரதிய கிசான் யூனியன் விவசாயிகளின் தில்லி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால், சம்யுக்த கிசான் மோா்ச்சா அமைப்பு போராட்டத்தில் பங்கேற்பதை இந்த முறை தவிா்த்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com