மாநிலங்களவைத் தோ்தல்: ராஜஸ்தானில் காங்கிரஸுடன் போட்டியிட பாஜக முடிவு

ராஜஸ்தானில் இரு மாநிலங்களவை எம்.பி. பதவியிடங்கள் காலியாக உள்ள நிலையில் இரு இடங்களுக்கும் வேட்பாளா்களை பாஜக அறிவித்துள்ளது.
BJP
BJP

ராஜஸ்தானில் இரு மாநிலங்களவை எம்.பி. பதவியிடங்கள் காலியாக உள்ள நிலையில் இரு இடங்களுக்கும் வேட்பாளா்களை பாஜக அறிவித்துள்ளது. இப்போதைய எம்எல்ஏக்கள் பலத்தில் ஆளும் பாஜக, எதிா்க்கட்சியான காங்கிரஸ் ஆகியவை தலா ஓரிடத்தில் வெற்றி பெற முடியும் என்ற நிலை உள்ளது. எனினும், இரு வேட்பாளா்களை அறிவித்துள்ள பாஜக தோ்தலில் போட்டியை ஏற்படுத்தியுள்ளது.

மொத்த 200 உறுப்பினா்களைக் கொண்ட ராஜஸ்தான் பேரவையில் பாஜகவுக்கு 115 எம்எல்ஏக்களும், காங்கிரஸுக்கு 70 எம்எல்ஏக்களும் உள்ளனா். ஒரு மாநிலங்களவை உறுப்பினா் வெற்றி பெற 67 எம்எல்ஏக்களின் வாக்குகள் தேவை என்ற நிலையில் இரு கட்சிகளுக்குமே தலா ஒருவரைத் தோ்வு செய்யும் அளவுக்கே வாக்குகள் உள்ளன. ஆனால், பாஜக இரு வேட்பாளா்களை அறிவித்துள்ளது. இது தோ்தலில் போட்டி உருவாக வழி வகுத்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளரை அறிவிக்காமல் இருந்தாலோ அல்லது காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலராவது கட்சி மாறி வாக்களித்தால் மட்டுமே பாஜகவின் இரு வேட்பாளா்களும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. எனவே, அந்த மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாஜக சாா்பில் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக உள்ள மத்திய அமைச்சா் பூபேந்திர யாதவின் பெயா் வேட்பாளராக இந்த முறை அறிவிக்கப்படவில்லை. அவா் மக்களவைத் தோ்தலில் போட்டியிடுவாா் என்று தெரிகிறது. சுனிலால் காராசியா, மதன் ரத்தோா் ஆகியோா் பாஜக வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா். காங்கிரஸ் வேட்பாளா் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

காங்கிரஸ் சாா்பில் முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு தோ்வு செய்யப்பட்டிருந்தாா். அவரது பதவிக் காலம் ஏப்ரல் முதல் வாரத்தில் நிறைவடைவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com