நாட்டை நேசித்த உண்மையான தவசீலர்

ஆன்மிக விளக்கமும் சமூக சேவையும்: ஆச்சார்ய வித்யாசாகர் மகாராஜின் அடையாளம்
நாட்டை நேசித்த உண்மையான தவசீலர்

புனிதத் துறவி ஆச்சார்ய வித்யாசாகர் மகாராஜ், அண்மையில் சமாதி அடைந்து நம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளார். ஆழ்ந்த ஞானம், எல்லையற்ற இரக்கம் மற்றும் மனிதகுலத்தை மேம்படுத்துவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன் அவரது வளமான ஆன்மிக வாழ்க்கை அமைந்திருந்தது.

நான் உட்பட எண்ணற்ற ஆத்மாக்களுக்கு வழிகாட்டிய அவரது இழப்பை மிக பெரிய இழப்பாக நான் உணர்கிறேன்.

பூஜ்ய ஆச்சார்யஜி, ஞானம், இரக்கம் மற்றும் சேவை ஆகிய மூன்று அம்சங்களின் சங்கமமாக எப்போதும் நினைவுகூரப்படுவார். அவர் ஓர் உண்மையான தவசீலராகத் திகழ்ந்தார்.

அனைத்து உயிர்களிடமும் அவர் கொண்டிருந்த அக்கறை, உயிர்களின் மீது ஆழ்ந்த அன்பு செலுத்தும் சமண சமயத்தின் கொள்கையைப் பிரதிபலித்தது.

அவரது தாக்கமும் செல்வாக்கும் ஒரு சமூகத்திற்குள் மட்டும் அடங்கிவிடவில்லை. பல்வேறு நம்பிக்கைகள், பிராந்தியங்கள் மற்றும் கலாசாரங்களைக் கடந்து பலதரப்பட்ட மக்களும் அவரிடம் வந்தனர். ஆன்மிக விழிப்புணர்வுக்காக, குறிப்பாக இளைஞர்களிடையே அவர் அயராது உழைத்தார்.

கல்வி அவரது இதயத்திற்கு மிகவும் நெருக்கமான ஒரு விஷயமாக இருந்தது.

கல்வி என்பது நீதி மற்றும் அறிவொளியுடன் கூடிய சமூகத்திற்கான வலுவான அடித்தளம் என்பது அவரது உறுதியான நம்பிக்கையாக இருந்தது.

தனிநபர்களுக்கு அதிகாரம் அளித்து, அவர்களது வாழ்க்கையில் ஒளியேற்றும் வழியாக கல்வி அறிவை அவர் ஆதரித்தார். அவரது போதனைகள் உண்மையான ஞானத்திற்கான பாதைகளாக அமைந்திருந்தன. சுய ஆய்வு மற்றும் சுய விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை அவை வலியுறுத்தின.

அதே நேரத்தில், அவர் நமது கலாசார நெறிமுறைகளில் வேரூன்றிய கல்வியை நமது இளைஞர்கள் பெற வேண்டும் என்று விரும்பினார்.

இந்தியாவின் மொழியியல் பன்முகத்தன்மை குறித்து பெருமிதம் கொண்ட அவர், இந்திய மொழிகளைக் கற்க வேண்டும் என இளைஞர்களை ஊக்குவித்தார்.

ஆச்சார்யஜி, சம்ஸ்கிருதம், பிராகிருதம் மற்றும் ஹிந்தி மொழிகளில் விரிவாக பல்வேறு விஷயங்கள் குறித்து எழுதினார். ஒரு துறவியாக அவர் அடைந்த உயரங்களும், நம் மண்ணில் அவர் எவ்வளவு ஆழமாக வேரூன்றி இருந்தார் என்பதும் அவரது புகழ்பெற்ற படைப்பான "மூக்மதி'யின் மூலம் தெளிவாக வெளிப்படுகிறது. தமது படைப்புகள் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் குரல் கொடுத்தார்.

ஆரோக்கியமான மற்றும் தூய்மையான அரசியலை ஆதரித்த அவர், கொள்கை வகுப்பது மக்களின் நலனைப் பற்றியதாக இருக்க வேண்டும் என்றும் சுயநலம் சார்ந்ததாக இருக்கக் கூடாது என்றும் கூறினார்.

மக்கள், தங்களுக்காகவும் தங்கள் குடும்பங்களுக்காகவும் சமூகத்திற்காகவும் நாட்டிற்காகவும் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் கொண்டுள்ள அர்ப்பணிப்பின் அடித்தளத்தின் மீது ஒரு வலுவான தேசம் கட்டமைக்கப்படுகிறது என்று அவர் நம்பினார். நேர்மை, ஒருமைப்பாடு மற்றும் தன்னம்பிக்கை போன்ற நற்பண்புகளை ஒவ்வொரு தனி நபரும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

அவர் எதைச் செய்தாலும், நிகழ்காலத்திற்காக மட்டுமல்லாமல், எதிர்காலத்திற்காகவும் செய்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சத்தீஸ்கர் மாநிலம் டோங்கர்கரில் உள்ள சந்திரகிரி ஜெயின் மந்திருக்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்தப் பயணம் பூஜ்ய ஆச்சார்யஜியுடனான எனது கடைசி சந்திப்பாக இருக்கும் என்று நான் சிறிதும் நினைக்கவில்லை.

அவரைச் சந்தித்த அந்தத் தருணங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அவர் என்னுடன் நீண்ட நேரம் பேசினார். தேசத்திற்கு சேவை செய்வதில் நான் மேற்கொண்ட முயற்சிகளுக்காக அவர் என்னை ஆசீர்வதித்தார். நமது நாடு செல்லும் திசை மற்றும் உலக அரங்கில் இந்தியாவுக்கு கிடைத்து வரும் மரியாதை குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

அவரது நினைவைக் கெளரவிக்கும் வகையில், அவர் பின்பற்றிய கொள்கைகளை பின்பற்றி நடக்க நாம் உறுதியேற்போம். இதன் மூலம் நாம் ஒரு மகத்தான ஆத்மாவுக்கு அஞ்சலி செலுத்துவோம்.

நமது நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் அவரது பணியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com