2050-இல் இந்திய மக்கள் தொகையில் 19.5% முதியோர்!

முதியோருக்கான நிதி வழிகாட்டுதல்: நீதி ஆயோக் சிறப்பு பரிந்துரைகள்
2050-இல் இந்திய மக்கள் தொகையில் 19.5% முதியோர்!

இந்தியாவின் மக்கள் தொகையில் 2050 ஆம் ஆண்டில் 19.5 சதவீதம் பேர் முதியோர்களாக இருப்பார்கள் என்பதால் அவர்களின் சேமிப்புக்கு கூடுதல் வட்டி, குடியிருப்பு திட்டம், கட்டாய சேமிப்பு திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசுக்கு தொலைநோக்கு ஆலோசனை வழங்கும் நீதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.

இது தொடர்பாக நீதி ஆயோக் "மூத்த குடிமக்கள் பராமரிப்பில் சீரமைப்பு' என்ற தலைப்பில் அளித்துள்ள ஆய்வு அறிக்கையில், "முதியோர்களுக்கு எளிதாக சேவைகள் அளிக்க தேசிய அளவில் இணையதளத்தை உருவாக்க வேண்டும்.

இந்தியாவில் பெரும்பாலான முதியோர், வங்கிச் சேமிப்பு வட்டியை நம்பி உள்ளதால், அதற்கான வட்டியை அதிகரிக்க வேண்டும்.

வயதான பெண்களுக்கு கூடுதல் வரிச் சலுகைகள் வழங்க வேண்டும்.

முதியோர் பயன்படுத்தும் பொருள்கள் மீதான வரி, ஜிஎல்டி மேலும் அதிகரித்து, முதியோருக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பெருநிறுவனங்கள் அளிக்கும் சமூக பொறுப்பு நிதியின் மூலம் நிதி ஆதாரம் இல்லாத முதியவர்களுக்கு சேவைகள் வழங்க வேண்டும். குடியிருப்பு திட்டங்கள் உருவாக்க வேண்டும்.

தனியார் மருத்துவமனைகள் முதியவர்களுக்கு கட்டணங்களில் தள்ளுபடி சேவை அளிக்க வேண்டும்.

75 சதவீதத்துக்கும் அதிகமான முதியோர் நீண்ட கால நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களை வீட்டில் வைத்து சிகிச்சை அளித்து பாதுகாக்க வேண்டியுள்ளது. ஆகையால், முதியோர் மருத்துவ பராமரிப்பு வர்த்தகம் ரூ.57,881 கோடியாக அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போதைய 140 கோடி மக்கள் தொகையில் 10 சதவீதம் மூத்த குடிமக்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை 2050}இல் 19.5 சதவீதமாக அதிகரிக்கும்' என்று நீதி ஆயோக் ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதியோர்களின் ஆயுட்காலம் 60 ஆண்டுகளுக்கு மேலாக அதிகரிப்பது உலகம் முழுவதும் ஏற்பட்டு வருகிறது.

இந்தியாவிலும் முதியோர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

அதேநேரத்தில், கருவுறுதல் குறைதல் விகிதம் 2 சதவீதத்துக்கும் குறைவாகவும், முதியோர்களின் ஆயுட்காலம் 70 ஆண்டுகளுக்கு மேலாகவும் உள்ளது என்று ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com