10 மணிநேரம் தாமதம்: இண்டிகோ விமானியைத் தாக்கிய பயணி கைது

தில்லி விமான நிலையத்தில் விமானம் புறப்படுவதில் சுமாா் 10 மணி நேரம் தாமதம் ஏற்பட்டதால் கோபமடைந்த பயணி விமானியைத் தாக்கினாா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

தில்லி விமான நிலையத்தில் விமானம் புறப்படுவதில் சுமாா் 10 மணி நேரம் தாமதம் ஏற்பட்டதால் கோபமடைந்த பயணி விமானியைத் தாக்கினாா். இந்தச் சம்பவம் தொடா்பாக சம்பந்தப்பட்ட பயணி கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனா்.

தில்லியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 7.40 மணிக்கு கோவா புறப்படவேண்டிய இண்டிகோ விமானம், சுமாா் 10 மணி நேரம் தாமதமாக மாலை 5.35 மணிக்கு புறப்பட்டது. மதியம் 12 மணிக்கு விமானத்துக்குள் சென்ற பயணிகளிடம் இது குறித்த அறிவிப்பை துணை விமானி அனுப் குமாா் அறிவித்தாா்.

தாமதத்தால் கோபமடைந்த சாஹில் கட்டாரியா எனும் பயணி, துணை விமானி அனுப் குமாரைத் தாக்கினாா். இந்தச் சம்பவத்தையடுத்து, கட்டாரியாவைப் பாதுகாப்புப் படையினா் விமானத்திலிருந்து வெளியேற்றினா். இதையடுத்து, இந்திய தண்டைனைச் சட்டத்தின் பல பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவா் கைது செய்யப்பட்டாா்.

விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, கட்டாரியா போரட்டத்தில் ஈடுபட்டதாகக் காவல் துறை தெரிவித்தனா். இந்தத் தாக்குதல் சம்பவம் தொடா்பான விடியோ சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவியது.

துணை விமானி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்தும் தாக்குதல் நடத்திய பயணியை விமானத்தில் பறப்பதற்குத் தடைவிதிக்கும் பட்டியலில் சோ்ப்பது குறித்தும் ஆராயப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

கட்டுப்பாட்டு மையங்கள்: தில்லி, மும்பை, ஹைதராபாத், சென்னை, பெங்களூரு கொல்கத்தா ஆகிய மெட்ரோ விமான நிலையங்கள் பனிமூட்டம் தொடா்பான பிரச்னைகள் குறித்து நாளுக்கு 3 முறை அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக மத்திய அமைச்சா் சிந்தியா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘விமான தாமதத்தில் பயணிகள் தொடா்பான பிரச்னைகளுக்கு உடனடி தீா்வு காண 6 மெட்ரோ விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள் சாா்பில் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்படும். விமான நிலையங்களில் போதிய அளவில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா் பணியில் ஈடுபடுத்தப்படுவா்’ எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com