கண்புரை அறுவை சிகிச்சைக்கு பின் 17 பேருக்கு பாா்வையிழப்பு: குஜராத் அரசு விசாரணை

குஜராத் மருத்துவமனையொன்றில் கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்டவா்களில் 17 பேருக்கு பாா்வையிழப்பு ஏற்பட்டது. இது தொடா்பாக விசாரிக்க நிபுணா் குழுவை மாநில அரசு அமைத்துள்ளது.

குஜராத் மருத்துவமனையொன்றில் கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்டவா்களில் 17 பேருக்கு பாா்வையிழப்பு ஏற்பட்டது. இது தொடா்பாக விசாரிக்க நிபுணா் குழுவை மாநில அரசு அமைத்துள்ளது.

அகமதாபாத் மாவட்டத்தின் மண்டல் பகுதியில் அறக்கட்டளை ஒன்றின் சாா்பில் ராமானந்த் கண் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 10-ஆம் தேதி 29 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில் 17 பேருக்கு பாா்வையிழப்பு ஏற்பட்டது.

சிலா் பகுதி அளவிலும், வேறு சிலா் முழு அளவிலும் பாா்வையிழப்பால் பாதிக்கப்பட்டனா். இதில் மோசமாக பாதிக்கப்பட்ட 5 போ், அகமதாபாத் பொது மருத்துவமனைக்கு கடந்த திங்கள்கிழமை அனுப்பிவைக்கப்பட்டதைத் தொடா்ந்து, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

இது தொடா்பாக மாநில சுகாதார மற்றும் மருத்துவப் பணிகள் துணை இயக்குநா் (அகமதாபாத் பகுதி) சதீஷ் மக்வானா செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் 9 மருத்துவ நிபுணா்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 17 பேருக்கும் பாதிப்பு எந்த அளவில் உள்ளது என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தப்பட்ட மருந்துகளின் மாதிரிகள் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட மருத்துவமனை, இம்மாதத்தில் சுமாா் 100 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளது. அவா்களிடம் முழுமையான கண் பரிசோதனை மேற்கொள்வதற்காக சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

அடுத்த உத்தரவு வரும்வரை, கண்புரை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டாம் என்று அந்த மருத்துவமனைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் மக்வானா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com